கூட்டம் கூட தடை: தர்ப்பணம் கொடுக்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்


கூட்டம் கூட தடை: தர்ப்பணம் கொடுக்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 18 Sep 2020 1:02 AM GMT (Updated: 18 Sep 2020 1:02 AM GMT)

மகாளய அமாவாசையையொட்டி கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டதால் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

புதுக்கோட்டை,

மறைந்த முன்னோர்களுக்கு மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக மகாளய அமாவாசை தினத்தில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் மகாளய அமாவாசையான நேற்று தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் சிலர் நேற்று புதுக்கோட்டையில் உள்ள பல்லவன் குளக்கரைக்கு வந்தனர். ஆனால், புரோகிதர்கள் யாரும் இல்லாததால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், நிலைமையை எடுத்துக்கூறி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

வீடுகளில்...

இதனால், அவர்கள் தங்களது வீடுகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பல்லவன் குளத்தில் பொதுமக்கள் யாரும் இறங்காத வகையில் படிக்கட்டுகள் முன்பு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் சிலர் பழம், எள், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவற்றை ஒரு சிறிய தட்டில் வைத்து வழிபட்டு அதனை அங்கேயே விட்டுச்சென்றனர்.

முறைப்படி தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும் மனதில் முன்னோர்களை நினைத்து வழிபட்டுக் கொண்டனர். மேலும் சாந்தநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். மகாளய அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

திருவரங்குளம்

திருவரங்குளம் அருகே திருவுடையார்பட்டி வெள்ளாற்றின் கரையில் அமைந்திருக்கும் திருமூலநாதர் திரிபுரசுந்தரி கோவில், திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் தெப்பக்குளம் ஆகியவற்றில் ஆண்டுதோறும் மூதாதையர்களுக்கு பொதுமக்கள் புனித நீராடி தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு கோவில் குளக்கரையில், ஆற்றங்கரையில் மக்கள் கூடுவதற்கு தடை காரணமாக பக்தர்கள் நீராடி விட்டு வீடுகளில் புரோகிதர் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர்.

கோடியக்கரை கடற்கரை

மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து கடலில் குளிப்பார்கள். இந்த ஆண்டு கொரோனா தடை காரணமாக கோடியக்கரை கடற்கரை நேற்று பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. இந்த பகுதியில் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மகாளய அமாவாசையையொட்டி நேற்று விராலிமலையில் உள்ள தெப்பக்குள கரையில் பொதுமக்கள் சிலர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.



Next Story