ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க தடையால் பொதுமக்கள் ஏமாற்றம்


ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க தடையால் பொதுமக்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 18 Sep 2020 1:43 AM GMT (Updated: 18 Sep 2020 1:43 AM GMT)

ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஸ்ரீரங்கம்,

தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசை ஆகும். அன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள அம்மாமண்டபம் படித்துறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

தடை

ஆனால் தற்போது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வரும் 30-ந்தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மகாளய அமாவாசையான நேற்று ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள படித்துறைகளில் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டு அம்மாமண்டபம் பூட்டப்பட்டது.

மேலும் அம்மாமண்டபத்திற்கு மக்கள் வருவதை தடுக்க மாம்பழச்சாலை மற்றும் அம்மாமண்டபம் சாலைகளில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் இரும்பு தடுப்புகள் வைத்து அடைத்து போலீசார் மக்களை திருப்பி அனுப்பினர். அதைமீறி பொதுமக்கள் செல்லாதவாறு அதிகாலை முதலே போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஏமாற்றம்

இதனால் வெளியூரிலிருந்த வந்த மக்கள் தர்ப்பணம் கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் புரோகிதர்களின் உதவியின்றி தாமாகவே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் தர்ப்பணம் கொடுத்து சென்றனர். அதேநேரம் முசிறி காவிரி ஆற்றில் நேற்று ஏராளமான பொதுமக்கள் புனித நீராடி, புரோகிதர்கள் மூலம் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். முசிறி காவிரி ஆற்றில் பொதுமக்களை கட்டுப்படுத்தவோ ஒழுங்குபடுத்தவோ போலீசார் யாரும் இல்லை. முசிறி, தா.பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே புரோகிதர்கள் மூலமாக மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தொட்டியம் காவிரி ஆற்றில் தொட்டியம், பால சமுத்திரம், மகேந்திர மங்கலம், ஏழூர்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள் ஆற்றில் குளித்துவிட்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து சென்றனர். ஜீயபுரம் அருகே திருப்பராய்த்துறை அகண்ட காவிரி ஆற்றங்கரையிலும், கோப்பு பாலத்தில் உள்ள விநாயகர் கோவில் பகுதியிலும் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Next Story