மூதாட்டி, வங்கி ஊழியரிடம் நகை பறித்த பட்டதாரி பெண், வாலிபர் கைது 6 மணி நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்


மூதாட்டி, வங்கி ஊழியரிடம் நகை பறித்த பட்டதாரி பெண், வாலிபர் கைது 6 மணி நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்
x
தினத்தந்தி 18 Sept 2020 8:11 AM IST (Updated: 18 Sept 2020 8:11 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் மூதாட்டி, வங்கி ஊழியரிடம் நகை பறித்த பட்டதாரி பெண் மற்றும் வாலிபரை போலீசார் கைது செய்தனர். பட்டதாரி பெண் 6 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்,

தஞ்சை டி.பி.எஸ். நகரை சேர்ந்தவர் பொன்னம்பலம். இவருடைய மனைவி சுந்தராம்பாள்(வயது 70). சம்பவத்தன்று இவர் அருகில் உள்ள கடைக்கு பால் வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பெண், சுந்தராம்பாள் கழுத்தில் கிடந்த 2½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டார். இது குறித்து சுந்தராம்பாள் தஞ்சை நகர தெற்கு போலீசில் புகார் செய்தார்.

தஞ்சை விளார் சாலையில் உள்ள தில்லை நகரை சேர்ந்தவர் கர்ணன். இவருடைய மகள் சூர்யா(25). இவர், தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று மதியம் சுந்தரம் நகரில் இருந்து திருப்பதி நகரில் உள்ள ஒரு மெஸ்சிற்கு சாப்பிட இருசக்கர வாகனத்தில் சென்றார். சாப்பிட்டு விட்டு வங்கிக்கு வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர், சூர்யா கழுத்தில் கிடந்த 1½ பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து சூர்யா தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார்.

இந்த 2 சம்பவங்களிலும் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவிட்டார். அதன் பேரில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன் மேற்பார்வையில் மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் அந்தந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிரமாக தேடி வந்தனர்.

பட்டதாரி பெண் கைது

அப்போது சுந்தராம்பாளிடம் நகை திருடியது தஞ்சை அருளானந்தபுரத்தை சேர்ந்த வினோத் என்பவரின் மனைவி பவித்ரா(25) என்பது தெரிய வந்தது. பி.எஸ்சி பட்டதாரியான பவித்ராவை போலீசார் சம்பவம் நடந்த 6 மணி நேரத்தில் கைது செய்தனர்.

இதேபோல் வங்கி ஊழியர் சூர்யாவிடம் நகை திருடியது தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி காந்தி நகரை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் திலகர்(22) என்பது தெரிய வந்தது. திலகரை, போலீசார் சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story