மகாளய அமாவாசை: நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்


மகாளய அமாவாசை: நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்
x
தினத்தந்தி 18 Sep 2020 5:04 AM GMT (Updated: 18 Sep 2020 5:04 AM GMT)

மகாளய அமாவாசையொட்டி நேற்று நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் பலர் தர்ப்பணம் கொடுத்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகாளய அமாவாசையையொட்டி காவிரி ஆறு ஓடும் பகுதிகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவார்கள். இந்த நிலையில், மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று சேலத்தில் உள்ள அணைமேடு, மூக்கனேரி உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் அதிகாலையிலே பொதுமக்கள் ஏராளமானோர் கூடினர்.

பின்னர் அவர்கள் மறைந்த தங்களது முன்னோர்களை நினைத்து பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து நீர்நிலைகளுக்கு சென்று குளித்து விட்டு தர்ப்பணம் கொடுத்தனர். வழக்கமாக சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தவனம் மற்றும் அணைமேடு பகுதியில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

மேட்டூர்

ஆனால் கொரோனா நோய்த்தொற்று காரணமாக சுகவனேஸ்வரர் கோவில் நந்தவனம் பகுதியில் தர்ப்பணம் கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது பற்றி தெரியாமல் நேற்று காலை அங்கு ஏராளமானோர் வந்தனர். பின்னர் அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு தர்ப்பணம் செய்யக்கூடாது என அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் அணைமேடு பகுதிக்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

மேட்டூர் காவேரி பாலம் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரையில் நேற்று ஏராளமானவர்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதன் காரணமாக நேற்று காலை காவிரி பாலம் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதே போல தேவூர் அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் நேற்று முன்னோர்களுக்கு பொதுமக்கள் பலர் தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள அங்காளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story