நீர்மட்டம் 61 அடியாக உயர்வு: வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்


நீர்மட்டம் 61 அடியாக உயர்வு: வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்
x
தினத்தந்தி 18 Sept 2020 11:22 AM IST (Updated: 18 Sept 2020 11:22 AM IST)
t-max-icont-min-icon

நீர்மட்டம் 61 அடியாக உயர்ந்ததையடுத்து வைகை அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 71 அடி ஆகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து கடந்த ஒரு மாதமாக மதுரை மாவட்ட பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட போதிலும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தற்போது அணையின் நீர்மட்டம் 61 அடியாக உயர்ந்துள்ளது.

பொதுவாக வைகை அணையின் நீர்மட்டம் 60-அடிக்கு மேல் உயரும் போது, தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாய பாசனத்துக்காகவும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். கடந்த ஆண்டு வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியை எட்டிய போது அணையில் இருந்து விவசாயம், குடிநீருக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் மூலம் விவசாயிகளும், பொதுமக்களும் பலனடைந்தனர்.

தண்ணீர் திறக்க வேண்டும்

அதன்படி தற்போது அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாய பாசனத்துக்காகவும் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டால் அணைக்கரைப்பட்டி, தர்மத்துப்பட்டி, மூனாண்டிப்பட்டி, புள்ளிமான் கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதன் மூலம் விவசாய பாசனத்துக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்கும்.

எனவே வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படாததால் வைகையாறு தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதேபோல் டி.அணைக்கரைப்பட்டி பகுதியில் வைகையாற்றில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படாததால் புதர்மண்டிய நிலையில் உள்ளது. அதனையும் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story