தொழில் போட்டி காரணமாக மந்திரவாதியை கொன்ற வாலிபர் கைது
தொழில் போட்டி காரணமாக மந்திரவாதியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பேரூர்,
கோவையை அடுத்த ஆலாந்துறை அருகே மோளப்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மகன் பூச்சி என்ற தர்மன் (வயது 50). மந்திரவாதி. திருமணமான இவருக்கு குழந்தை கிடையாது.
வடிவேலம்பாளையம் பட்டக்காரர் வீதியை சேர்ந்தவர் ரவி (24). இவரும் தர்மனும் உறவினர்கள். ரவி, கோவில் விழாக்களில் ஆர்வம் காட்டி வந்தார். தர்மன் ஒரு கோவிலை அமைத்து பில்லி, சூனியம், செய்வினை போன்ற செயல்களை செய்ததாகவும், அதனால் அங்கு கூட்டம் அதிகமாக வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் ரவியின் உறவினர்கள் செல்லும் கோவிலில் கூட்டம் வராமல் இருந்துள்ளது. இதனால் தொழில் போட்டி காரணமாக தர்மனுக்கும், ரவிக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தர்மன் ரவியை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவி, தர்மனை பழிவாங்க திட்டமிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு காருண்யா நகர் பகுதியில், தர்மன் மதுபோதையில் நடந்து சென்றார். எதிரே, ரவியும் போதையில் அங்கே வந்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. ரவி தர்மனை கீழே தள்ளிவிட்டு, தனது கையிலிருந்த டார்ச் லைட்டால் தலையில் தாக்கினார். பின்னர், மார்பு கழுத்து பகுதியில் காலால் பலமாக மிதித்தார். இதில், படுகாயம் அடைந்த தர்மன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை நேற்று கைது செய்தனர்.
கைதான ரவி போலீசில் அளித்த வாக்குமூலத்தில், பில்லி, சூனியம் செய்வதில் தர்மன் கெட்டிக்காரர். எனவே அவர் பில்லி சூனியம் வைத்து என்னை ஏதாவது செய்து விடுவார் என்று பயந்தேன். அவரை கொலை செய்தால் தான் நிம்மதியாக வாழ முடியும் என கருதினேன். எனவே போதையில் வந்த அவரை வழிமறித்து வாக்குவாதம் செய்து அடித்து உதைத்து தாக்கினேன். அப்போது அந்த வழியாக சென்ற சிலர் வேடிக்கை பார்த்தனர். யாரும் தடுக்க முன்வரவில்லை. இதை பயன்படுத்தி தர்மனை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்ப முயன்றேன். ஆனால் போலீசாரிடம் மாட்டிக்கொண்டேன் என்றார்.
கைதான ரவி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story