பாளைய ஏகாம்பரநல்லூரில் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை


பாளைய ஏகாம்பரநல்லூரில் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 18 Sept 2020 4:00 PM IST (Updated: 18 Sept 2020 3:43 PM IST)
t-max-icont-min-icon

பாளைய ஏகாம்பரநல்லூரில் ரேஷன் கடையை சூழ்ந்து பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே பாளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் மேல்நகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இக்கடையின் மூலம் பாளைய ஏகாம்பரநல்லூர், ஏகாம்பரநல்லூர், கோட்டாமேடு, பாளைய ஏகாம்பரநல்லூர் கூட்ரோடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 510 குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

அதில் பாளைய ஏகாம்பரநல்லூர் கூட்ரோடு பகுதியில் வசிக்கும் ரேஷன் அட்டைதாரர்கள் 175 பேர் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து ரேஷன் பொருட்களை வாங்கி செல்லும் நிலை உள்ளது. அதேபோல் நேற்று காலை 50 பெண்கள் மற்றும் ஆண்கள் என பலர் திரண்டு பாளைய ஏகாம்பரநெல்லூர் கிராமத்துக்கு வந்து ரேஷன் கடையை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாளைய ஏகாம்பர நல்லூர் கூட்ரோடு பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் எனக்கோரிக்கை விடுத்தனர். இதனால் பாளைய ஏகாம்பநல்லூர் ரேஷன் கடை முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து ரேஷன் பொருட்களை வாங்கி வருகிறோம். போக்குவரத்து வசதி கூட இல்லை, நடந்தே வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் எங்கள் பகுதிக்கு பகுதிநேர ரேஷன் கடை அமைத்துத் தர வேண்டும் எனக் கடந்த 3 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. எங்கள் பகுதிக்கு பகுதிநேர ரேஷன் கடை அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முன்வர வேண்டும், என்றார்.

அதற்கு ரேஷன் கடை விற்பனையாளர் சுரேஷ் கூறுகையில், இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும், எனக்கூறி விட்டு ரேஷன் பொருட்களை வழங்காமல், ரேஷன் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார்.

Next Story