வாணாபுரம் அருகே ரூ.2,500-க்காக முதியவரை கம்பியால் அடித்துக்கொன்றோம் - கைதான 3 வாலிபர்கள் வாக்குமூலம்
வாணாபுரம் அருகே முதியவரை ரூ.2 ஆயிரத்து 500-க்காக கம்பியால் அடித்துக்கொன்றோம், எனக் கைதான 3 வாலிபர்கள் போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளனர்.
வாணாபுரம்,
வாணாபுரம் அருகே உள்ள குங்குலியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி (வயது 75). இவரின் மனைவி அலமேலு (70). கணவன்-மனைவி இருவரும் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரை ஓரத்தில் தனியாக கூரை வீட்டில் வசித்து வந்தனர். அவர்களின் மகன் பாலகிருஷ்ணன் (55). 15-ந்தேதி இரவு கொள்ளையர்களால் தாக்கி ராஜி கொலை செய்யப்பட்டார். வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் போலீசார் வாணாபுரம் அருகே காம்பட்டு கூட்ரோட்டில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு ஸ்கூட்டியில் வேகமாக வந்த 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். 3 பேரும் வாணாபுரம் பகுதியைச் சேர்ந்த அன்பழகனின் மகன் பிரவீன்குமார் (20), ராஜேந்திரனின் மகன் மணிகண்டன் (20), கலியமூர்த்தியின் மகன் சுபாஷ் (19) எனத் தெரிய வந்தது.
குங்குலியநத்தம் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ராஜியை கொலை செய்ததாக, அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
நாங்கள் 3 பேரும் நண்பர்கள். எங்குச் சென்றாலும் ஒன்றாகத்தான் தான் போவோம். 15-ந்தேதி இரவு அங்குள்ள ஏரியில் அமர்ந்திருந்தோம். அப்போது எங்களுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. தண்ணீர் குடிப்பதற்காக அருகில் இருந்த கூரை வீட்டுக்குச் சென்றோம். அங்கிருந்த முதியவர் ராஜியின் சட்டை பாக்கெட்டில் ரூ.2 ஆயிரத்து 500 இருந்தது. அந்தப் பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றோம்.
அவர், பணத்தைத் தர மறுத்ததால், அவரை கீழே தள்ளி விட்டு, நாங்கள் அணிந்திருந்த பெல்டால் கழுத்தை நெரித்தோம். அவரை, 3 பேரும் சேர்ந்து இரும்புக்கம்பியால் பலமாக அடித்தோம். அதைப் பார்த்த அவரின் மனைவி அலமேலு ஓடி வந்து, எங்களை தடுக்க முயன்றார்.
அப்போது அவரை தாக்கி, அவர் அணிந்திருந்த மூக்குத்தி மற்றும் ராஜி வைத்திருந்த ரூ.2 ஆயிரத்து 500-ஐ பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டோம். ராஜி இறந்து விட்டதை அறிந்த நாங்கள் போலீசில் சிக்காமல் இருக்க அதிகாலை நேரத்தில் பெங்களூரு தப்பிச்செல்ல திட்டமிட்டோம். அதற்காக, ஒரு ஸ்கூட்டியில் புறப்பட்டு வேகமாக வந்தபோது, போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.
மேற்கண்டவாறு 3 பேரும் வாக்கு மூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து பிரவீன்குமார், மணிகண்டன், சுபாஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், மூக்குத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசார், அவர்களை போளூர் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story