வாலாஜா டோல்கேட்டில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு


வாலாஜா டோல்கேட்டில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு
x
தினத்தந்தி 18 Sept 2020 5:00 PM IST (Updated: 18 Sept 2020 5:03 PM IST)
t-max-icont-min-icon

வாலாஜா டோல்கேட்டில் தி.மு.க.பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிப்காட்(ராணிப்பேட்டை),

தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் மறைவுக்கு பிறகு புதிய பொதுச் செயலாளராக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எம்.எல்.ஏ. அக்கட்சியினரால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து 9-ந்தேதி நடந்த பொதுக்குழுவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தி.மு.க. பொதுச் செயலாளராக பொறுப்பேற்று முதல் முறையாக ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வருகை புரிந்த துரைமுருகன் எம்.எல்.ஏ.வுக்கு ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. சார்பில், வாலாஜா டோல்கேட்டில் மேள, தாளம் முழங்க பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ. பூங்கொத்துக் கொடுத்து, மாலை அணிவித்து வரவேற்றார்.

அப்போது துரைமுருகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தி.மு.க. என்பது நேற்று முளைத்த காளான் அல்ல. இந்த இயக்கத்துக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த இயக்கம் ஒன்று தோன்றி இருக்காவிட்டால், நான் பொதுச் செயலாளர் இல்லை. காந்தி எம்.எல்.ஏ. இல்லை. காரணம், ரொம்ப அதிகமாகக் கூட அல்ல 1910-ம் ஆண்டு நமது இனத்தில் 100-க்கு 3 பேர் கூட படிக்கவில்லை. ஆனால் 3 சதவீதம் இருக்கும் சில இனத்தினர் 100 சதவீதம் படித்தார்கள்.

எனவே அவர்கள் வேலைவாய்ப்பில் இருந்தார்கள். நம்முடைய இனத்துக்கு படிக்க தெரியாது. நமது இனம் ஒரு அடிமை போல, காலில் செருப்பு போட்டு நடக்கக்கூடாது. தோளில் துண்டு போடக்கூடாது. பிற இனத்தினரை கண்டால் 5 அடி தூரத்தில் தலை குனிய வேண்டும்.

இவ்வாறு வாழ்ந்ததை நினைத்து கணேச முதலியார், தியாகராயர், டி.எம்.நாயர் போன்ற தலைவர்கள் எல்லாம் கூடி நமக்காக ஒரு கட்சியை தொடங்கினார்கள். அந்தக் கட்சியின் பெயர் தான் ஜஸ்டிஸ் கட்சி. அந்தக் கட்சி 1916-ல் தொடங்கி 1920-ல் ஆட்சிக்கு வந்தது. அந்தக் கட்சி தான் நம்மை போன்றவர்கள் எல்லாம் படிப்பதற்கு காரணம். வேலையில் ஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்து உரிமை கொடுத்தது.

அந்தக் கட்சியில் இருந்து பிரிந்து பெரியார் தனியாக சுயமரியாதை இயக்கம் தொடங்கினார். அதில் இருந்து அண்ணா நமது கட்சியை 1949-ல் கட்சியை ஆரம்பித்தார். அந்தக் கட்சி 1967-ல் ஆட்சியை பிடித்தது. என்னை உயர்த்தியவர்கள் ராணிப்பேட்டை வாக்காளர்கள் தான். என் வரலாற்றை எழுதும்போது, ராணிப்பேட்டைக்கென தனி அத்தியாயம் உருவாக்கப்படும். காந்தி எம்.எல்.ஏ. இந்த இயக்கத்துக்குக் கிடைத்த வீர வாள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கதிர்ஆனந்த் எம்.பி., ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., தலைமைச் செயற் குழு உறுப்பினர் க.சுந்தரம், மாவட்ட துணைச் செயலாளர் வசந்தி ரவி, வாலாஜா ஒன்றிய செயலாளர் ஷேசா வெங்கட், மாவட்ட பிரதிநிதி அக்ராவரம் ஏ.கே.முருகன், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் பி.என்.எஸ்.சரவணன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ரா.சிவஞானம், மாவட்ட ஆதி திராவிட அமைப்பாளர் சக்திவேல் குமார், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெயந்தி திருமூர்த்தி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கே.பி.வெங்கடேசன், மாவட்ட வர்த்தகரணி அமைப்பாளர் மு.சிவானந்தம், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு அமைப்பாளர் இசட்.அப்துல்லா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கடப்பேரி எம்.சண்முகம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் எம்.ஜெயக்குமார், பி.ஆனந்த், மாவட்ட மருத்துவரணி துணை அமைப்பாளர் டாக்டர் எம்.தாமரைக்கண்ணன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் எஸ்.கே.ஏழுமலை, வாலாஜா ஒன்றிய அவைத் தலைவர் வாசுதேவன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சரஸ்வதி ரவிச்சந்திரன், ஜான் ஜெயபால், கே.பன்னீர்செல்வம், ஒன்றிய பொருளாளர் எல்.ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் பி.கே.பொன்னன், எம்.எச்.ராஜபாண்டி, நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் பெ.வடிவேலு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் பவானி வடிவேலு மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் பிற அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story