கொணவட்டத்தில், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் - அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு


கொணவட்டத்தில், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் - அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Sept 2020 5:45 PM IST (Updated: 18 Sept 2020 5:38 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் கொணவட்டம் மதீனாநகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சாலை மறியல் நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகளை திடீரென பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்,

வேலூர் மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட கொணவட்டம் மதீனாநகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு சாலை வசதி, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்றும், இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அங்குள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்பட்டுள்ளது. மேலும் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து சாலையில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசிணீது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த சாலை வழியாக செல்வதற்கு மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் சாலையை சீரமைக்கவில்லை.

அதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மதீனாநகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நேற்று காலை திடீரென அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த 4-வது மண்டல உதவிகமிஷனர் பிரபு ஜோசப்குமார், வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து தரக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். மதீனாநகரில் அடிப்படை வசதிகளை ஓரிரு நாட்களில் செய்து தர ஏற்பாடு செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story