சாதிச்சான்று கேட்டு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை பெற்றோருடன் மாணவர்கள் முற்றுகை
சாதிச்சான்று கேட்டு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை பெற்றோருடன் மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் சாலாமேடு பகுதியில் வசித்து வரும் இந்து மலைக்குறவன் இனத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் தங்களுக்கு சாதிச்சான்று வழங்கக்கோரி நேற்று முன்தினம் மதியம் தங்கள் பெற்றோருடன் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும் கோட்டாட்சியர் அங்கு வராததால் இவர்கள் மாலை வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரவு 8 மணியையும் கடந்து நீடித்தது. அதன் பின்னர் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கலெக்டரிடம் சென்று இதுபற்றி முறையிடுங்கள் என போலீசார் கூறியதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலை சாலாமேடு பகுதியை சேர்ந்த இந்து மலைக்குறவன் இன மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். இதேபோல் சித்தேரிக்கரை, திருவெண்ணெய்நல்லூர், மடப்பட்டு, எரளூர், ஆற்காடு, ஆயந்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மலைக்குறவன் இன மாணவ- மாணவிகளும் தங்கள் பெற்றோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
இவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சாதிச்சான்று கேட்டு விண்ணப்பித்து 5 ஆண்டுகளாகியும், இதுநாள் வரையிலும் வழங்காததால் மாணவர்கள், உயர்படிப்பு படிக்க முடியாத நிலை உள்ளது, எனவே உடனடியாக சாதிச்சான்று வழங்கக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன் பிறகு அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த திடீர் போராட்டத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story