பண்ருட்டி அருகே பயங்கரம்: பெண்ணை கொன்று ஆற்றில் உடல் புதைப்பு - யார் அவர்? போலீசார் விசாரணை


பண்ருட்டி அருகே பயங்கரம்: பெண்ணை கொன்று ஆற்றில் உடல் புதைப்பு - யார் அவர்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 Sept 2020 7:15 PM IST (Updated: 18 Sept 2020 7:15 PM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே பெண்ணை கொன்று ஆற்றில் உடல் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பண்ருட்டி, 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெரியபகண்டை தென்பெண்ணையாற்றின் நடுவில் நேற்று காலையில் 2 கைகள் மட்டும் வெளியே தெரிந்தது. மற்ற உடல் பகுதி முழுவதும் புதைக்கப்பட்டு இருந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வருவாய்த்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், தாசில்தார் உதயகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பின்னர் ஆற்றில் இருந்து அந்த உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அது 55 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாகும். அவர் பச்சை நிற சட்டை அணிந்திருந்தார். உடல் அரை நிர்வாண நிலையில் இருந்தது. இடது கால் முட்டிக்கு கீழ் பகுதி வெட்டப்பட்டு இருந்தது. வெட்டப்பட்ட காலின் ஒரு பாகத்தை காணவில்லை. உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் யார்? என்பது குறித்து போலீசாரால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே இந்த வழக்கில் துப்பு துலக்குவதற்காக கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. பெண் புதைக்கப்பட்ட இடத்தை மோப்பமிட்ட நாய், அங்கிருந்து ராம்பாக்கம்-மடுகரை சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஓடிச்சென்று நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. ஆனால் அந்த நாய் நின்ற இடத்தில் ரத்தக்கறைகள் இருந்தன. அதனை போலீசார் சேகரித்தனர்.

இதையடுத்து பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 55 வயதுடைய பெண்ணை மர்மநபர்கள் அடித்தும், வெட்டியும் கொலை செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணின் உடலை தென்பெண்ணையாற்றின் நடுவில் புதைத்துள்ளனர். 2 அடி ஆழம் தோண்டி புதைக்கப்பட்டதால் மூடப்பட்ட மணல், காற்றில் பறந்து, கைகள் வெளியே தெரிந்துள்ளது. அந்த பெண்ணின் இடது கால் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. பெண்ணின் உடலை பார்க்கும்போது, இந்த சம்பவம் நடந்து 2 அல்லது 3 நாட்கள் இருக்கலாம் என்று தெரிகிறது.

கொலை செய்யப்பட்ட பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்தும், எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்தும், அவரை கொலை செய்தது யார் ? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

பெண்ணை கொன்று ஆற்றில் உடல் புதைக்கப்பட்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story