மகாளய அமாவாசையையொட்டி பொதுமக்கள் செல்ல தடை: கடலூர் சில்வர் பீச், ஆறுகள் வெறிச்சோடின - வீடுகளிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்


மகாளய அமாவாசையையொட்டி பொதுமக்கள் செல்ல தடை: கடலூர் சில்வர் பீச், ஆறுகள் வெறிச்சோடின - வீடுகளிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்
x
தினத்தந்தி 18 Sept 2020 7:45 PM IST (Updated: 18 Sept 2020 7:35 PM IST)
t-max-icont-min-icon

மகாளய அமாவாசையையொட்டி பொதுமக்கள் கடலூர் சில்வர் பீச், ஆறுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்ததால், வீடுகளிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கடலூர் சில்வர் பீச், கிள்ளை கடற்கரை, பெண்ணையாறு, கொள்ளிடம், மணிமுக்தாறு போன்ற நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தடை விதித்து கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டார். இந்நிலையில் மகாளய அமாவாசையான நேற்று தடையை மீறி சிலர் சில்வர் பீச்சுக்கு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக சென்றனர். அவர்களை அங்கு தடுப்பு கட்டை அமைத்து, போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். வெளியே சென்று ஊர் திரும்பிய தேவனாம்பட்டினம் மக்களையும் போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகே அனுமதித்தனர்.

அதேபோல் பெரியார் அரசு கல்லூரிக்கு தேர்வு எழுத சென்ற மாணவர்களை, அவர்கள் அடையாள அட்டையை காண்பித்த பிறகே செல்ல அனுமதித்தனர். வழக் கமாக அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்காதவர்களும், இந்த மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் ஆசி கிடைக்கும் என்பதால் சில்வர் பீச்சில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தர்ப்பணம் கொடுப்பார்கள். ஆனால் இந்த தடை உத்தரவால் நேற்று கடலூர் சில்வர் பீச் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடலூர் தென்பெண்ணையாற்றிலும் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் சிலர் காலை 7 மணிக்கே வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு சென்றனர். 7 மணிக்கு பிறகு வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பி விட்டனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளிலும் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆனாலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதன்படி நேற்று பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே நீராடி முன்னோர்களுக்கு படையல் செய்து, தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக புரோகிதர்களை வரவழைத்து காய்கறிகள், அரிசி, வெற்றிலை, பாக்கு, பழம், அகத்தி கீரை, எள் போன்ற பொருட்களை வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

கடலூர் திருவந்திபுரம் கெடிலம் ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காகவும், வீட்டில் வைத்து தர்ப்பணம் செய்த எள், அரிசி உள்ளிட்ட பொருட்களை ஆற்றில் போடுவதற்காகவும் பொதுமக்கள் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினர்.

Next Story