மகாளய அமாவாசையில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் பகுதி வெறிச்சோடியது - கோவிலுக்கு பக்தர்கள் வருகை மிக மிக குறைவு
கொரோனா பரவலால் மகாளய அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் பகுதி வெறிச்சோடியது. கோவிலுக்கு பக்தர்கள் வருகை மிகவும் குறைவாக இருந்தது.
ராமேசுவரம்,
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு ஆண்டு தோறும் தை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை அன்று திரளான பக்தர்கள் வருவது வழக்கம். கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து இறந்து போன முன்னோர்களுக்கு திதி, தர்ப்பண பூஜை செய்து வழிபாடு செய்வதற்கு இந்த அமாவாசை நாட்கள் உகந்த நாட்களாகும்.
இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அக்னி தீர்த்த கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து புரட்டாசி மாத மகாளய அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னிதீர்த்த கடல் மற்றும் கடற்கரை பகுதி காலை முதல் மாலை வரையிலும் பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் முழுமையாக வெறிச்சோடி காணப்பட்டது. அக்னி தீர்த்த கடற்கரை பகுதிக்கு பக்தர்கள் செல்லாமல் இருக்கும் வகையில் பல இடங்களில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது.
அதையும் மீறிஅக்னி தீர்த்த கடலில் நீராட வந்த ஏராளமான பக்தர்களை போலீசார் கடலில் நீராட அனுமதி கிடையாது என அறிவுரை கூறி அவர்களை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுப்பி வைத்தனர். சில பக்தர்கள் சங்குமால் மற்றும் ஒலைகுடா பகுதிக்கு சென்று அங்குள்ள கடலில் இறங்கி நீராடினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று கடலில் நீராட அனுமதி கிடையாது, உடனே வெளியே வாருங்கள் என எச்சரிக்கை செய்து அனைவரையும் திருப்பி அனுப்பி வைத்தனர்.
கடலில் நீராட தடை விதிக்கப்பட்ட நிலையிலும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை முதலே கிழக்கு வாசல் நுழைவு பகுதியில் இருந்து வடக்கு ரதவீதி சாலை வரையிலும் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளிவிட்டு சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நின்றனர்.
கோவிலுக்குள் பக்தர்கள் அனைவரின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கை, கால்களை சுத்தம் செய்த பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்குள் நெரிசல் இல்லாமல் செல்லும் வகையில் சாமி, அம்பாள் மற்றும் மூன்றாம் பிரகாரங்களிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் சென்று வந்தனர்.
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவிலின் உள்பகுதி, நான்கு ரத வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமான போலீசாரும், ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அக்னி தீர்த்த கடலில் புனித நீராட மற்றும் கடற்கரையில் அமர்ந்து திதி, தர்ப்பண பூஜை செய்ய விதிக்கப்பட்ட தடையால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மகாளய அமாவாசை அன்று ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்கள் வருகை மிக மிக குறைவாகவே இருந்தது.
அதுபோல் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு வந்த ஆடி அமாவாசை அன்றும் ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story