திருப்பத்தூர் அருகே, போதையில் வியாபாரி அடித்துக்கொலை
திருப்பத்தூர் அருகே போதையில் விறகு வியாபாரியை அடித்து கொலை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள கே.வலையபட்டியைச் சேர்ந்தவர்கள் ஆதப்பன் (வயது 56), ஆறுமுகம் (48). இவர்கள் விறகு வியாபாரம் செய்து வந்தனர். இவர்கள் நேற்று முன் தினம் இரவு கண்டரமாணிக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு பட்டமங்கலம் மேலத்தெருவைச்சேர்ந்த செல்வம் என்பவரது மகன் கிட்டு என்ற கிருஷ்ணவர்மன் (22), காரைக்குடி சங்கராபுரத்தைச்சேர்ந்த கங்காதரன் மகன் சிவபிரகாஷ் (24) ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது தின்பண்டம் வாங்குவது தொடர்பாக ஆதப்பனுக்கும், சிவப்பிரகாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த கிட்டு கீழே கிடந்த கம்பை எடுத்து ஆதப்பனையும், ஆறுமுகத்தையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஆதப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆறுமுகத்திற்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோஷ்டியூர் போலீசார் ஆதப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கிட்டு மற்றும் சிவபிரகாஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கிட்டு மீது கல்லல், நாச்சியாபுரம், மதகுபட்டி, திருக்கோஷ்டியூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் திரண்ட ஆதப்பனின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அவரது உடலை வாங்க மாட்டோம் என்று கூறியதால் மதியம் 3 மணிக்கு பிறகே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆதப்பனின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.25 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என அவரது உறவினர் கள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்து, திருப்பத்தூர் தாசில்தார் ஜெயலெட்சுமியிடம் மனு வழங்கினர். பின்னர் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாத்துரையிடம் மனு கொடுத்தனர். பின்னர் உடலை உறவினர்கள் வாங்கிச்சென்றனர்.
Related Tags :
Next Story