தனுஷ்கோடியில் கைதான இலங்கை போலீசிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 நாட்கள் விசாரிக்க கோர்ட்டு அனுமதி


தனுஷ்கோடியில் கைதான இலங்கை போலீசிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 நாட்கள் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 18 Sept 2020 9:00 PM IST (Updated: 18 Sept 2020 8:58 PM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக வந்து தனுஷ்கோடியில் கைதான இலங்கை போலீஸ் காரரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க ராமநாதபுரம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

ராமநாதபுரம், 

இலங்கை கொழும்பு புறநகர் பகுதியான சபுகஸ்கந்த பகுதியில் உள்ள ஒரு மரக்கடையில் இருந்து கடந்த மாதம் 26-ந் தேதி இலங்கை போலீசார் 23 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றினர். இதுதொடர்பாக மர கடையின் உரிமையாளரை போலீசார் கைதுசெய்தனர். இவரின் தகவலின்படி அனுரகுமார என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். இவர் இலங்கை துறைமுக காவல்நிலைய காவலர் அர்த்த நாயக முதியான் சமீந்த பிரதீப் குமார் பண்டாராவின் (வயது30) அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

காவலர் பிரதீப் குமார் பண்டாரா தனது சகோதரர் அனுரகுமார என்பவர் மூலம் மர கடையின் உரிமையாளருக்கு போதைப்பொருளை சப்ளை செய்து அங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கு போதைப்பொருளை கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கைப்பற்றப்பட்ட ஹெராயின் மூடையில் அச்சிடப்பட்டிருந்த முத்திரையும், தமிழகத்தில் கோவை பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை நிழல் உலக தாதாவும் பருந்து மூலம் போதைப்பொருள் கடத்துவதில் கில்லாடியான அங்கொட லொக்கா என்பவரின் போதைப்பொருள் மூடைகளில் உள்ள முத்திரையும் ஒன்றாக இருந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இலங்கை மற்றும் தமிழகம் இடையே போதைப்பொருள் கடத்தலில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளதாக பலத்த சந்தேகம் ஏற்பட்டது. மேலும், சில நாட்களுக்குமுன் இலங்கை துறைமுக போலீஸ் நிலையத்தில் கைப்பற்றி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மாயமாகி இருந்ததால் அந்த போதைப்பொருளை பிரதீப் குமார் பண்டாரா எடுத்து தனது சகோதரர் மூலம் கொடுத்திருப்பதாக சந்தேகித்தனர். இதனால் அவரை வழக்கில் சேர்த்து விசாரிக்க முடிவு செய்தநிலையில் பிரதீப் குமார் பண்டாரா இலங்கை போலீசாரிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக பைபர் படகு ஒன்றில் தமிழகம் தப்பி வந்தார். கடந்த 5-ந் தேதி மண்டபம் கடலோர போலீசார் பிரதீப்குமார் பண்டாராவை கைது செய்து சென்னை பூந்தமல்லி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிரதீப்குமார் பண்டாராவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இதற்காக சென்னை பூந்தமல்லி சிறையில் இருந்து பிரதீப்குமார் பண்டாரா பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். மனுவை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன் வருகிற 21-ந் தேதி பிற்பகல் வரை விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து கோவை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் ஆகியோர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர் இலங்கையில் இருந்து வந்திறங்கிய கம்பிப்பாடு கடற்கரை பகுதிக்கு அழைத்து சென்று போலீசார் விசாரிக்க உள்ளனர். மேலும், கோவையில் மர்மமான முறையில் உயிரிழந்து மதுரையில் தகனம் செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்காவின் மரணம் குறித்தும் அவருக்கும் பிரதீப் குமார் பண்டாரா, அண்ணன் அனுரகுமாராவிற்கும் உள்ள தொடர்பு குறித்தும் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Next Story