மகாளய அமாவாசை: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
மகாளய அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வத்திராயிருப்பு,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. நேற்று மகாளய அமாவாசையையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் மலையேற தாணிப்பாறை வனத்துறை கேட்டிற்கு முன்பு குவிந்தனர்.
காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கபட்டனர். சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமகாலிங்கம் சுவாமி மற்றும் சந்தன மகாலிங்கம் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
நேரம் ஆக, ஆக பக்தர்களின் வருகை அதிகமானதால் வனத்துறை கேட்டிற்கு முன்பு நின்றிருந்த பக்தர்களுக்குள் தள்ளு, முள்ளு ஏற்பட்டு நெரிசல் ஏற்பட்டது. இதில் ராஜபாளையத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரி (வயது 20) மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் ஆங்காங்கே சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மகாளய அமாவாசைக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, கோவில் செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்திருந்தனர்.
பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்க முடியவில்லை. சமூக இடைவெளி இன்றியும் முக கவசங்கள் இன்றியும் பக்தர்கள் வருகை புரிந்தார்கள்.
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்த போதிலும் பெரும்பாலோனோர் தங்களின் குழந்தைகளுடன் வந்திருந்தனர். அவர்கள் வனத்துறை கேட்டின் முன்பு தடுத்து நிறுத்தப்பட்டு கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், தாணிப்பாறை அடிவாரம் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் குறைவான அளவில் தான் போலீசார் ஈடுபட்டனர். அதேபோல அடிவாரப் பகுதிகளில் முன் ஏற்பாடுகள் சரிவர இல்லை, பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றம்சாட்டினர்.
வனத்துறையின் சார்பாக டோக்கன் போடுவதால் பக்தர்கள் 1 மணிக்குள் மலை ஏற முடியாமல் தவிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது என கூறினர்.
Related Tags :
Next Story