கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட தனியார் பஸ்கள் மீண்டும் இயங்க தொடங்கின
கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ்கள் சிவகங்கை மாவட்டத்தில் மீண்டும் இயங்க தொடங்கியன.
காரைக்குடி,
கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து 5மாதங்களாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 1-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் பஸ்போக்குவரத்து மாவட்டத்திற்குள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் சில நாட்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்போக்குவரத்து தொடங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் 50சதவீத பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு போக்குவரத்து தொடர்ந்து இயங்கி வந்தது. இந்நிலையில் குறைவான பயணிகளுடன் பஸ் போக்குவரத்தை தொடங்கினால் எங்களுக்கு பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியது வரும் என கூறி தனியார் பஸ் உரிமையாளர்கள் சார்பில் பஸ் போக்குவரத்து நிறுத்தி வைத்தனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களாக சிவகங்கை மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் 80 சதவீதம் வரை அனைத்து பஸ்களிலும் பயணிகள் ஏற்றி சென்று வருகின்றனர்.
இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து தனியார் பஸ்களை இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. பொதுவாக தனியார் பஸ்களில் அதிக அளவில் கூட்டத்தை ஏற்றி சென்று லாபத்தை மட்டும் கணக்கில் கொண்டு இயக்கப்படும். இந்த வகையில் கடந்த 2 நாட்களாக காரைக்குடி பகுதியில் இயக்கப்பட்டு வரும் தனியார் பஸ்களில் உள்ள இருக்கைகளில் எவ்வித இடைவெளியும் இல்லாமல் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.
மேலும் அரசு பஸ்களில் உள்ள டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பயணிகளுக்கு ஏறுவதற்கு முன்பாக அவர்களின் கைகளில் கிருமி நாசினியை தெளித்த பின்னர் அனுமதித்தனர். ஆனால் அவற்றை சில தனியார் பஸ்களில் முறையாக பின்பற்றாமல் இயக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் பஸ்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து அவை இயக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story