வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு பேரிடர் மீட்பு படை வீரர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நடவடிக்கை


வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு பேரிடர் மீட்பு படை வீரர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நடவடிக்கை
x
தினத்தந்தி 19 Sept 2020 4:30 AM IST (Updated: 19 Sept 2020 12:09 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு பேரிடர் மீட்பு படை வீரர்களின் செயல்பாடுகள் மற்றும் மீட்பு உபகரணங்கள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மழை வெள்ளம் ஏற்பட்டால், பொதுமக்களை மீட்கும் வகையில் பேரிடர் மீட்பு படை பயிற்சி பெற்ற போலீசார் தயார் நிலையில் உள்ளார்களா, மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதா? என்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, தூத்துக்குடி ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் தலைமையிலான பேரிடர் மீட்பு படையினர், ரப்பர் படகு, விளக்குகள், முதலுதவி பெட்டிகள், மரம் அறுக்கும் கருவி உள்ளிட்ட 24 வகையான உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், அதனை மீட்பு படையினர் இயக்கியும் காண்பித்தனர்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் உள்ள போலீசாருக்கு உரிய அறிவுரைகள் வழங்கி தயார் நிலையில் உள்ளனர். மாநில பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற போலீசார் மற்றும் மீட்பு உபகரணங்களை அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க உள்ளோம். வெள்ளம் வந்தால் கூட உடனடியாக மக்களை காப்பாற்றுவதற்கு தூத்துக்குடி மாவட்ட போலீசார் தயார் நிலையில் உள்ளனர்“ என்றார்.

ஆய்வின் போது, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வன் உடன் இருந்தார்.

Next Story