கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - செல்வனின் மனைவி கண்ணீர் பேட்டி


கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -  செல்வனின் மனைவி கண்ணீர் பேட்டி
x
தினத்தந்தி 19 Sept 2020 5:00 AM IST (Updated: 19 Sept 2020 12:36 AM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடம் அருகே வியாபாரி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர், அ.தி.மு.க. நிர்வாகி மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். 3 பேர் கைது செய்யப்பட்டனர். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்புஏற்பட்டது.

திசையன்விளை,

செல்வன் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் திசையன்விளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் செல்வனின் மனைவி ஜீவிதா தனது 3 மாத கைக்குழந்தையுடன் போராட்டத்தில் பங்கேற்றார். மேலும், மாலையில் நடந்த சாலை மறியலிலும் அவர் கலந்து கொண்டார்.

பின்னர் ஜீவிதா கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது:-

என்னுடைய கணவருக்கு 4 சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ளனர். என்னுடைய கணவர்தான் இளையவர். எங்களது குடும்ப சொத்தை ஆக்கிரமிப்பதற்காக, திருமணவேலின் தூண்டுதலின்பேரில், எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது தட்டார்மடம் போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்தினர். என்னுடைய கணவரின் சாவுக்கு காரணமான அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்துள்ளார். இதனால் நாங்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளோம். கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையென்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

செல்வன் கொலையில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திசையன்விளை போலீஸ் நிலையத்தை செல்வனின் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திசையன்விளை போலீஸ் நிலையத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திசையன்விளை தாசில்தார் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள், செல்வனின் உறவினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், செல்வன் கொலையில் தொடர்புடைய காவல் துறையைச் சேர்ந்த நபர்கள் உள்பட அனைவரையும் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். செல்வனின் பிரேத பரிசோதனையை மருத்துவர்கள் கொண்ட குழுவினர் செய்யவும், பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ கேமராவில் பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டது. செல்வனின் மனைவி ஜீவிதா மற்றும் அவரது 3 மாத கைக்குழந்தைக்கு போதுமான இழப்பீட்டு தொகையினை வழங்கவும், ஜீவிதாவுக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனுவினை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

நெல்லை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தகவல்
தண்ணீர் கேன் வியாபாரி செல்வன் கொலை வழக்கு குறித்து, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கொலையான செல்வனின் தாயார் அளித்த புகாரின்பேரில், தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் திருமணவேல் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் உள்பட அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story