வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? ஆயுதப்படை போலீசாருக்கு சிறப்பு பயிற்சி


வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? ஆயுதப்படை போலீசாருக்கு சிறப்பு பயிற்சி
x
தினத்தந்தி 19 Sept 2020 4:30 AM IST (Updated: 19 Sept 2020 1:54 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது குறித்து ஆயுதப்படை போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

நெல்லை,

வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போதும், ஆபத்து காலத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்காக பேரிடர் மீட்பு பயிற்சியினை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன உத்தரவுப்படி மாநில பேரிடர் மீட்பு காவலர்கள், நெல்லை மாவட்ட ஆயுதப்படை போலீசாருக்கு 5 நாட்கள் பயிற்சி அளித்தனர்.

பயிற்சி வகுப்பில் வெள்ளம் மற்றும் புயல் வந்தால் ஆபத்தில் சிக்கி உள்ள பொதுமக்களை காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன பொருட்கள் பயன்படுத்தி, அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பது பற்றியும், அதன் செயல்பாடுகள் எவ்வாறு என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்தபயிற்சி வகுப்பில் வெள்ள நேரங்களில் ஆற்றுப்பகுதியில் சிக்கி கொண்ட பொதுமக்களை மீட்கும் நடவடிக்கை என்ன என்பது பற்றி ஒத்திகை ஸ்ரீவைகுண்டம் ஆற்றுப்பகுதியில் நடைபெற்றது. அதில் காற்றடித்து இயந்திர விசையுடன் செல்லக்கூடிய படகுககளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், பொதுமக்களை எவ்வாறு மீட்க வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியினை ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி பார்வையிட்டார்.

இந்த பயிற்சி நிறைவு நாளான நேற்று காவல்துறையினருக்கு பாய்சனிங் வகுப்பு நடைபெற்றது. அதில் பாம்பு இனங்கள் குறித்து வகுப்பு நடத்தப்பட்டது. பேரிடர் காலத்தில் பாம்பு இனங்கள் எதிர்பாராதவிதமாக தங்களை தாக்கினால் எவ்வாறு முதலுதவி செய்து காத்துக் கொள்ள வேண்டும் எனவும், எவ்வகையான பாம்புகளுக்கு விஷத்தன்மை அதிகமாக இருக்கும் என்பது பற்றி வகுப்பு நடைபெற்றது.

பயிற்சியின் நிறைவில் மாநில பேரிடர் மீட்பு போலீசாரை பாராட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சான்றிதழ் வழங்கினார். இந்த பயிற்சி வகுப்பில் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சிசில், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story