3-வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்


3-வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 19 Sept 2020 4:00 AM IST (Updated: 19 Sept 2020 3:23 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், ஈரோடு வட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தக்கோரி கடந்த 16-ந்தேதியில் இருந்து ஈரோடு தாசில்தார் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே நேற்று முன்தினம் ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி, கோட்ட அளவில் மட்டுமே கலந்தாய்வு நடத்த முடியும் வட்டார அளவில் நடத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று 3-வது நாளாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈரோடு கோட்டத்துக்கு உள்பட்ட 138 கிராம நிர்வாக அதிகாரிகள் பணிகளை புறக்கணித்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக பட்டா மாறுதல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை பெற முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் போலீஸ் துறை சம்பந்தமான பணிகளும் தேக்கம் அடைந்துள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் அழகர்சாமி கூறும்போது, ‘ஈரோடு மாவட்டத்தில் கோபி வருவாய் கோட்டத்தில் தாலுகா அளவில் இடமாறுதல் நடத்தப்படுகிறது. ஆனால் ஈரோடு கோட்டத்தில் உள் நோக்கத்துடன் கோட்ட அளவிலான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடந்த மறுக்கிறார்கள்.

அரசாணைப்படி 365 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணி செய்யக்கூடாது. ஆனால் ஈரோடு மாநகர் பகுதியில் 2 ஆண்டுகளுக்கு மேல் கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். எனவே கலெக்டர் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அல்லது மாநில அளவில் போராட்டம் நடத்த ஆலோசித்துள்ளோம்’ என்றார்.

Next Story