ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி வழங்கும் திட்டம் - அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்


ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி வழங்கும் திட்டம் - அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
x
தினத்தந்தி 19 Sept 2020 5:28 AM IST (Updated: 19 Sept 2020 5:28 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி வழங்கும் திட்டத்துக்கு தனியார் அறக்கட்டளையுடன் அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் செயல்படும் நகரமைப்பு குழுமங்களில் ஒருங்கிணைந்த முழுமையான ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி வழங்கும் செயல்திட்டத்தை நிறைவேற்ற அரசின் நகர மற்றும் கிராம அமைப்புத்துறை பெங்களூருவைச் சேர்ந்த இ-கவ் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.

அப்போது தலைமை நகர அமைப்பாளர் சத்தியமூர்த்தி, முதுநிலை நகர அமைப்பாளர் ஸ்ரீதரன், உறுப்பினர் செயலர் கந்தர்செல்வன், இ-கவ் அறக்கட்டளை துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் கட்டிட வரைபடங்களை ஆய்வு செய்ய முழுமையான தானியங்கி ஆய்வு மென்பொருளை அந்த அறக்கட்டளை இலவசமாக செய்து கொடுக்க உள்ளது. கட்டிட வரைபடம் மற்றும் மனைப்பிரிவு அனுமதியை மக்களுக்கு விரைவாகவும் வெளிப்படைத்தன்மையுடன் வழங்கும் பொருட்டு தேசிய தகவல் மைய உதவியுடன் கடந்த டிசம்பர் மாதம் நகர, கிராம அமைப்புத்துறை வலைதளத்தில் ( https://obps.py.gov.in ) அறிமுகப்படுத்தியது.

இதன்மூலம் பொதுமக்கள் தங்களின் வரைபட அனுமதி விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் நிலையை மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்த ஆன்லைன் வசதி தானியங்கி ஆய்வு மென்பொருள் இன்றி புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர விவகாரங்கள் அமைச்சகம் ஒருங்கிணைந்த ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை கொண்டு வர புதுச்சேரி அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

எனவே தேசிய தகவல் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்துடன் இ-கவ் அறக்கட்டளையுடன் இணைத்து முழுமையான ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை புதுச்சேரி அரசு செயல்படுத்த உள்ளது.

Next Story