திருக்கனூர் அருகே பரபரப்பு: பச்சிளம் குழந்தை உடலுடன் உறவினர்கள் போராட்டம் ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் - உயிரிழந்ததாக ஆஸ்பத்திரி முற்றுகை


திருக்கனூர் அருகே பரபரப்பு: பச்சிளம் குழந்தை உடலுடன் உறவினர்கள் போராட்டம் ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் - உயிரிழந்ததாக ஆஸ்பத்திரி முற்றுகை
x
தினத்தந்தி 19 Sept 2020 5:31 AM IST (Updated: 19 Sept 2020 5:31 AM IST)
t-max-icont-min-icon

திருக்கனூர் அருகே பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்த போனது. ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் உயிரிழந்ததாக கூறி ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருக்கனூர்,

திருக்கனூர் அருகே உள்ள சோரப்பட்டு காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதுரை வீரன் (வயது32). சலவை தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (24). தம்பதிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வர்ஷினி என பெயர் சூட்டினர்.

இந்த குழந்தைக்கு நேற்று மாலை திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனே மதுரைவீரன், அவரது மாமியார் சரசு (50) ஆகியோர் குழந்தையை மண்ணாடிப்பட்டில் உள்ள அரசு சமுதாய நலவழி மையத்திற்கு (ஆஸ்பத்திரி) சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு கொண்டும் செல்லும்படி அறிவுறுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து மதுரைவீரன் குழந்தையை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்குள்ள ஆம்புலன்ஸ் வெளியே சென்று இருந்தது. குழந்தையின் நிலைமை மோசமாக இருந்ததால் மோட்டார் சைக்கிளிலேயே மாமியார் மற்றும் குழந்தையுடன் புதுச்சேரிக்கு புறப்பட்டார். ஆனால் சிறிது தூரம் சென்ற நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

அதையடுத்து மதுரைவீரன் மற்றும் அவரது உறவினர்கள் குழந்தையின் உடலுடன் மண்ணாடிப்பட்டில் உள்ள சமுதாய நலவழி மையம் முன்பு ஆம்புலன்ஸ் வசதி செய்து தராததை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்லா சத்தியநாராயணா, சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகையில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்தில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனை செய்து தருவதாக போலீசார் வாக்குறுதி அளித்தனர். அதனையேற்று அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story