தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் - அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க கோரிக்கை


தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் - அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 19 Sept 2020 3:45 AM IST (Updated: 19 Sept 2020 7:01 AM IST)
t-max-icont-min-icon

அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க கோரி தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்றுகாலை காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் அபிமன்னன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜகுமார், அமுல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில், கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வாழும் அனைவருக்கும் 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக வார்டு வாரியாக வேலை என்கிற சமூக பாகுபாட்டை கடைபிடிக்கும் போக்கை கைவிட வேண்டும். மாத்தூர் கிராம விவசாய தொழிலாளர்களுக்கு 3 மாதமாக 100 நாள் வேலை வழங்கப்படாமல் உள்ளதை கைவிட்டு உடனடியாக அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்.

100 நாள் வேலைக்கான அட்டை கேட்டு மனு கொடுத்துள்ளவர்களுக்கு காலதாமதமின்றி வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை நகர்புறம், பேரூராட்சி பகுதிகளிலும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் மாவட்ட தலைவர் வாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மாலதி, மாநகர செயலாளர் குருசாமி, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சவுந்தர்ராஜன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைச் செயலாளர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும். அது எந்த வங்கியாக இருந்தாலும் பரவாயில்லை. குறிப்பிட்ட வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என யாராவது கட்டாயப்படுத்தினால் புகார் அளிக்கலாம். 100 நாள் வேலைக்கான அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் அட்டை வழங்கப்படும். அதன்பிறகும் அட்டை வரவில்லை என்றால் புகார் செய்யலாம். வேலை தேடி வரும் அனைவருக்கும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் என்றார்.

இதையடுத்து தங்கள் போராட்டத்தை விவசாய தொழிலாளர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story