ஆண்டிமடம் பகுதியில், அதிக பாரம் ஏற்றிச்செல்லும் ராட்சத லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம்
ஆண்டிமடம் பகுதியில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் ராட்சத லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆண்டிமடம்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சூரக்குழி கிராமம் மற்றும் ஆண்டிமடம் பஸ் நிலையம் அருகே இரண்டு வேகத்தடைகள் உள்ளன. அரியலூரில் உள்ள சிமெண்டு ஆலைகளுக்கு நெய்வேலியில் இருந்து நிலக்கரி சாம்பல் ஏற்றிக்கொண்டும், திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக தேவையான மண் ஏற்றிக்கொண்டும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ராட்சத லாரிகள் சென்று வருகின்றன. இதில் பெரும்பாலான லாரிகளில் சரக்கு உள்ள பகுதியில் பெயரளவிற்கு தார்ப்பாய் கொண்டு மூடி எடுத்துச்செல்வதால் சாம்பல், மண் ஆகியவை காற்றில் பறக்கின்றன.
இதனால் அந்த லாரிகளின் பின்னால் செல்கின்ற இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் சாம்பல், மண் விழுந்து, கண்களை கசக்கிக் கொண்டு செல்வதால் விபத்து ஏற்படும் அபாயத்தில் பயணிக்கின்றனர். மேலும் மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றிக்கொண்டு செல்வதால் வேகத்தடையில் ராட்சத லாரிகள் ஏறி இறங்கும்போது, அளவுக்கு அதிகமாக ஏற்றிய பாரத்தால் லாரியின் மேல் பக்கவாட்டில் இருந்து சாம்பல் மற்றும் மண் ததும்பி கீழே விழுகிறது.
இதனால் வேகத்தடை உள்ள சாலை பகுதி சாம்பல் மயமாக காணப்படுகிறது. ராட்சத லாரிகளை தொடர்ந்து பின்னால் வரும் மற்ற லாரி, பஸ் மற்றும் இதர வாகனங்கள் சாம்பல், மண் கட்டி மீது ஏறி செல்லும்போது புழுதி பறப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள், அந்த பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபார நிறுவனங்களில் உள்ளவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த சாம்பலால் கண் எரிச்சல் ஏற்பட்டு சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
இப்பகுதியில் உள்ள வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் இது குறித்து ஆண்டிமடம் தாசில்தார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ராட்சத லாரிகளில் மோட்டார் வாகன சட்டத்திற்கு உட்பட்டு சரியான அளவில் பொருட்களை ஏற்றிச் சென்றால் இதுபோன்று சாலையில் ஏற்படும் புழுதியை தடுக்கலாம். இதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story