கரூரில் கொடூர சம்பவம்: மனைவி கண் முன்னே புதுமாப்பிள்ளை வெட்டிக் கொலை - போலீசார் விசாரணை
கரூரில் மனைவி கண்முன்னே புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கரூர்,
கரூர் சின்னஆண்டாங்கோவில் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவர், கரூர்-கோவை சாலையில் இளநீர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ரஞ்சிதம். இந்த தம்பதிக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள். குணசேகரனின் இளநீர் கடை அருகிலேயே அவருடைய 2-வது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 27) கரும்பு ஜூஸ் கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில் குணசேகரனும், அவருடைய மனைவியும் இளநீர் வாங்குவதற்காக நேற்று அதிகாலை பொள்ளாச்சிக்கு சென்று விட்டனர். இதனால் கிருஷ்ணமூர்த்தியும், அவருடைய மனைவி ஷஸ்மிதாவும் (23) இளநீர் கடை மற்றும் ஜூஸ் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது இளநீர் கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில், தலை மற்றும் கைகளில் அவருக்கு வெட்டு விழுந்தது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தன் கண்முன்னே கணவர் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிப்பதை பார்த்த ஷஸ்மிதா நிலைகுலைந்து போனார்.
பின்னர், அருகில் உள்ளவர்கள் துணையுடன் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கணவரை கொண்டு சென்று சேர்த்தார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்தவர்கள் யார்?, என்ன காரணத்துக்காக அவரை கொலை செய்தனர், காதல் பிரச்சினை காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணமூர்த்தியும், ஷஸ்மிதாவும் காதலித்து கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story