ரூ.29 லட்சம் கடன் தொகையை திரும்ப தராததால் திருச்சியில் கட்டுமான நிறுவன அதிபரை காரில் கடத்தி சித்ரவதை - சென்னையை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு
ரூ.29 லட்சம் கடன் தொகையை திரும்ப தராததால் திருச்சியில் கட்டுமான நிறுவன அதிபரை காரில் கடத்தி சித்ரவதை செய்ததாக சென்னையை சேர்ந்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி,
சென்னை பெசன்ட்நகர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர், விருஷா ஹோம்ஸ் என்ற பெயரில் கட்டுமான தொழில் நடத்தி வருகிறார். இவர், சென்னை திருவான்மியூரை சேர்ந்த விஜயன் என்பவர் மூலம் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு ரூ.29 லட்சம் கடன் பெற்றார். ஆனால் அந்த தொகையை விஜயன் பல முறை கேட்டும், அதை கொடுக்காமல் சரவணன் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சரவணன், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் புதிதாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியில் ஈடுபட்டு மேற்பார்வையிட்டு வந்தார். இதையறிந்த விஜயன், தனக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்கு ஈடாக திருச்சி திருவானைக்காவல் டிரங்க் ரோட்டில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை தனது பெயருக்கு பதிவு செய்து தருமாறு சரவணனிடம் கேட்டுள்ளார். அதற்கும் சரவணன் மறுத்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு சரவணன், திருச்சி அம்மாமண்டபம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த விஜயன் மற்றும் அவரது நண்பர்கள் சென்னை ஒடைமாநகர் ஆல்பர்ட், திருவான்மியூரை சேர்ந்த சுப்ரா ஆகியோர் சரவணனை காரில் குண்டுக்கட்டாக தூக்கிப்போட்டு கடத்தி சென்றனர். சென்னை-திருச்சி பைபாஸ் சாலைக்கு கார் சென்றது. காரில் செல்லும்போதே சரவணனை கையால் தாக்கி சித்ரவதை செய்ததுடன் அரிவாளை காட்டி கொலை மிரட்டலும் விடுத்தனர். மேலும் சில ஆவணங்கள், வெற்று ஆவணங்களில் கையெழுத்து பெற்றனர். பின்னர் பைபாஸ் சாலையில் காரில் இருந்து சரவணனை தள்ளிவிட்டு சென்னைக்கு சென்று விட்டனர்.
அங்கிருந்து வந்த சரவணன், ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் மணிராஜ் ஆகியோர், காரில் கடத்தி சென்று சித்ரவதை செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக விஜயன், அவரது நண்பர்கள் ஆல்பர்ட் மற்றும் சுப்ரா ஆகியோர் மீது 8 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
தலைமறைவான 3 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு சென்னை விரைந்துள்ளது.
Related Tags :
Next Story