பண்டைய கால தமிழர்கள் எந்த வகை மணலை பயன்படுத்தினர் ? கீழடி அகழாய்வு நடந்த இடத்தில் மத்திய பல்கலைக்கழக குழுவினர் ஆய்வு


பண்டைய கால தமிழர்கள் எந்த வகை மணலை பயன்படுத்தினர் ? கீழடி அகழாய்வு நடந்த இடத்தில் மத்திய பல்கலைக்கழக குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 19 Sept 2020 3:15 AM IST (Updated: 19 Sept 2020 9:57 AM IST)
t-max-icont-min-icon

பண்டையகால தமிழர்கள் எந்த வகை மணலை பயன்படுத்தினர்? என்பதை அறிவதற்காக கீழடியில் அகழாய்வு நடந்த இடத்தில் மத்திய பல்கலைக்கழக குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.

திருப்புவனம், 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த பகுதியில் உள்ள மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயம்கொண்டபெருமாள், உதவி பேராசிரியர் பிரியங்கா, நீரியியல் ஆய்வாளர் சரவணன் உள்பட 5 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். அவர்கள் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவினர் கீழடியில் உள்ள குழிகளில் கிடைத்த மண்ணையும் ஆய்வு செய்தனர். 3 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள வைகை ஆற்றுக்கு சென்றும் அந்த பகுதியில் மண்ணை சேகரித்தனர். ஆற்றின் வலது கரை பகுதியில் உள்ள மண்ணையும் மாதிரிக்கு எடுத்தனர்.

அதன் பின்னர் இந்த குழுவினர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கீழடி மண்ணின் தன்மை குறித்தும், பண்டைய காலத்தில் தமிழர்கள் எந்த வகையை சேர்ந்த மணலை பயன்படுத்தினர் என்றும், நிலத்தின் மேல் பகுதி மற்றும் அடிப்பகுதி மண்ணின் தன்மை குறித்தும் ஆய்வு செய்ய வந்துள்ளோம். கீழடி அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த மண்ணைக் கொண்டு வைகை நாகரிகம் எவ்வாறு இருந்திருக்கும் என்று ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும் நீர்வழி பாதைகளும் ஆய்வு செய்யப்பட்டு, எவ்வளவு ஆழத்தில் தண்ணீர் வருகிறது என்றும், இந்த பகுதியில் நீரோட்டம் எவ்வாறு உள்ளது? என்பதையும் சோதனை செய்ய உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். அப்போது மாநில தொல்லியல் துணை இயக்குனர் சிவானந்தம், தொல்லியல் அலுவலர்கள் பாஸ்கரன், ஆசைதம்பி, சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதைதொடர்ந்து தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம் கூறியதாவது:-

தற்போது கீழடி பகுதியில் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பல்வேறு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. மத்திய பல்கலைக்கழக குழுவினர் கீழடி மண்ணை எடுத்து சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். இந்த ஆய்வு நடைபெற்ற பின்னர் இதுகுறித்த அறிக்கை சமர்பிக்கப்படும். அப்போது இங்குள்ள மண்ணின் தன்மை குறித்து தெரியவரும். மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கிய பின்னர்தான், 7-வது கட்ட அகழ்வாராய்ச்சி குறித்து தமிழக அரசு முறையாக அறிவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story