மேட்டுப்பாளையம் வனப்பகுதியில், காயங்களுடன் அவதிப்பட்ட ஆண் காட்டு யானை சாவு - மற்றொரு யானைதாக்கியதால் பரிதாபம்


மேட்டுப்பாளையம் வனப்பகுதியில், காயங்களுடன் அவதிப்பட்ட ஆண் காட்டு யானை சாவு - மற்றொரு யானைதாக்கியதால் பரிதாபம்
x
தினத்தந்தி 19 Sept 2020 12:00 PM IST (Updated: 19 Sept 2020 11:52 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காயங்களுடன் அவதிப்பட்ட காட்டு யானை இறந்து கிடந்தது. மற்றொரு யானை தாக்கியதால் பரிதாபமாக இறந்தது.

மேட்டுப்பாளையம், 

கோவை வனக்கோட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகம் நெல்லித்துறை காப்புக்காடு பகுதியில் முன்னங்கால் வீக்கம் மற்றும் உடலில் காயங்களுடன் சுமார் 20 வயதில் இருந்து 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று நடக்க சிரமப்பட்டு மிகவும் அவதிப்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் முதல் அவதிப்பட்டு வந்த இந்த ஆண் யானைக்கு வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் மருந்து, மாத்திரைகளை பொடி செய்து உணவு உருண்டை மற்றும் பழங்களில் வைத்து யானை நடமாட்டம் கண்டறியப்பட்ட பகுதிகளில் அவ்வப்போது வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஆண் யானைக்கு தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் வல்லுனர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு மயக்க ஊசி செலுத்தி யானைக்கு சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

மருத்துவ சிகிச்சையின்போது உதவிக்காக கோவை சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து சுயம்பு, வெங்கடேஷ் ஆகிய இரண்டு கும்கி யானைகள் தேக்கம்பட்டிக்கு வரவழைக்கப்பட்டது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததும் 2 கும்கி யானைகள் பவானி ஆற்றை கடந்து நெல்லித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டன. நெல்லித்துறை காப்புக் காட்டில் உச்சியில் யானை இருந்தது அதனால் மருத்துவக் குழுவினரால் உடனடியாக சிகிச்சை அளிக்க முடியவில்லை. யானை சமவெளிப் பகுதிக்கு வந்ததும் மருத்துவ குழுவினர் மருத்துவ சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை வனத்துறையினர் கண்காணிப்பு செய்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காயங்களுடன் அவதிப்பட்ட அந்த ஆண் யானை இறந்து கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், அரசு வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் உதவி வனப்பாதுகாவலர்கள் தினேஷ்குமார், செந்தில்குமார் ஓய்வுபெற்ற உதவி வன பாதுகாவலர் நசீர், ஓய்வுபெற்ற கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மனோகரன், தேக்கம்பட்டிகால்நடை மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், வனச்சரக அலுவலர் செல்வராஜ் பயிற்சி வனச்சரக அலுவலர்கள் நித்தியா, பவித்ரா, தமிழ்நாடு வன உயிரியல்வாரிய உறுப்பினர் பரணிதரன் மற்றும் வனத்துறையினர் நெல்லித்துறையில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த வனப் பகுதியில் நடந்து சென்று யானை இறந்து கிடந்த இடத்தை அடைந்தனர். பின்னர் மருத்துவர் சுகுமார் முன்னிலையில் இறந்து கிடந்த ஆண் யானையின் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்கிடையில் காயமடைந்த யானை துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்த காரணத்தால் மருத்துவர் சுகுமார் இறந்த யானை உடலை முதலில் மெட்டல் டிடெக்டர் மூலம் ஆய்வு செய்து உடலுக்குள் ஏதேனும் துப்பாக்கி குண்டுகள் உள்ளதா என பரிசோதனை நடத்தினார். பின்னர் அவர்கூறுகையில், ஏற்கனவே காயமடைந்த இந்த ஆண் யானையை நேற்று மீண்டும் மற்றொரு காட்டு யானை கடுமையாக தாக்கி உள்ளது. இதனால் அந்த யானை கீழே சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்துள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்டதற்கான தடயங்கள் எதுவும் அதன் உடலில் இல்லை என்றார்.

மேலும் கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறும் போது, கோவை வனக்கோட்டத்தில் ஆண் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவற்றின் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன. தற்போது இறந்த இந்த யானையுடன் சேர்த்து கோவையில் ஐந்து யானைகள் மோதல் காரணமாக இறந்துள்ளது என்றார்.


Next Story