கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் குமரியில் தேர்வு மையம் அமைக்க வேண்டும் - ஆசிரிய பயிற்சி மாணவிகள், கலெக்டர் அலுவலகத்தில் மனு


கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் குமரியில் தேர்வு மையம் அமைக்க வேண்டும் - ஆசிரிய பயிற்சி மாணவிகள், கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 19 Sept 2020 11:15 AM IST (Updated: 19 Sept 2020 12:00 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், குமரி மாவட்டத்தில் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று ஆசிரிய பட்டய பயிற்சி மாணவிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

குமரி மேற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் ஐடன்சோனி தலைமையில் சென்னையில் ஆசிரிய பட்டய பயிற்சி பயிலும் காட்டுக்கடை பகுதியை சேர்ந்த ஷில்பா, களியக்காவிளையை சேர்ந்த அஸ்லின் ஜினி, திங்கள்சந்தையை சேர்ந்த அகஸ்டினா ஜெனிலா ஜினி, பனச்சமூடு பகுதியை சேர்ந்த அனிற்றா, உண்ணாமலைக்கடையை சேர்ந்த ஏஞ்சல் ஆகியோரும் அவர்களது பெற்றோரும் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தனித்தனியாக மனு கொடுத்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

நாங்கள் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறோம். தற்போது சென்னையில் உள்ள ஒரு ஆசிரிய பட்டய பயிற்சி பள்ளியில் படித்து வருகிறோம். வருகிற 21-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 7-ந் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற உள்ளது. முதலில் இந்த தேர்வுகள் மாணவர்கள் வசிக்கும் மாவட்டத்திலேயே நடைபெறுவதாக பள்ளி நிர்வாகத்தினர் கூறியிருந்தனர்.

ஆனால் அதற்கு மாறாக எங்களுக்கான தேர்வு மையம் சென்னையில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவ விடுதிகளை திறக்க அரசு தடை செய்துள்ளதால் எங்கள் பள்ளி நிர்வாகம் விடுதியை திறக்க மறுக்கிறது.

எனவே கொரோனா அச்சுறுத்தல் உள்ள இந்த காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் வசிக்கும் நாங்கள் சென்னைக்கு சென்று தேர்வு எழுதுவது மிகவும் கடினமானது. அதுமட்டுமின்றி எங்களுக்கு கொரோனா மனதளவில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே பி.எட். மாணவர்களுக்கு நடப்பதுபோல் வீட்டில் இருந்தவாறு ஆன்லைன் முறையில் தேர்வு எழுதவோ அல்லது குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆசாரிபள்ளம் அல்லது கோட்டார் ஆகிய இரண்டு தேர்வு மையங்களில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுத அனுமதி வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story