முதல்-அமைச்சர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடு குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஐ.ஜி. ஆலோசனை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குமரிக்கு வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு நேற்று போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நாகர்கோவில்,
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிற 22-ந் தேதியன்று இரவு வருகிறார். பின்னர் நாகர்கோவில் ராமவர்மபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். மறுநாள் காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்க இருக்கும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு, அனைத்து துறை அதிகாரிகள் மத்தியில் பேசுகிறார்.
இதில் மாவட்டத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, வளர்ச்சி பணி திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
முதல்-அமைச்சரின் வருகையையொட்டி நாகர்கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இந்த நிலையில், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு நேற்று மதியம் நாகர்கோவில் வந்தார்.
பின்னர் முதல்-அமைச்சர் வந்து செல்லும் வழித்தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வளாகம் மற்றும் ஆய்வு கூட்டம் நடக்கும் அரங்கு ஆகியவற்றை பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், முதல்-அமைச்சர் ஓய்வெடுக்கும் ராமவர்மபுரம் அரசு விருந்தினர் மாளிகையை ஆய்வு செய்தார்.
இதனைதொடர்ந்து, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு தலைமையில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், முதல்-அமைச்சர் வருகையையொட்டி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணி மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
Related Tags :
Next Story