புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: குமரி பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்


புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: குமரி பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2020 8:16 AM IST (Updated: 20 Sept 2020 8:16 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

நாகர்கோவில்,

பெருமாளுக்கு உகந்த தமிழ் மாதமாக புரட்டாசி கருதப்படுகிறது. அதிலும் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு விரதம் இருப்பதற்கு ஏற்ற நாளாகவும் கூறப்படுகிறது. அதனால் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெரும்பாலானோர் விரதம் இருந்து, பெருமாளை வணங்கி வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு, பெருமாள் சிறந்த வரங்களை தந்து அந்த ஆண்டு முழுவதும் துன்பங்களை நீக்கி ஆனந்தம் தருவார் என்பதும், ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்தால் சனியின் தொல்லைகள் நீங்கும் என்பதும் ஐதீகம்.

அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாதம் கடந்த 17-ந் தேதி பிறந்தது. இந்த மாதத்தின் முதல் சனிக்கிழமை நேற்று ஆகும். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்று காலையில் இருந்தே ஆண்கள், பெண்கள் என தனித்தனியாகவும், குடும்பம் குடும்பமாகவும் பெருமாள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் பெருமாள் கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

சிறப்பு பூஜைகள்-அபிஷேகம்

நாகர்கோவில் வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு நிர்மாலிய பூஜை, 9 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

இதேபோல் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில், ஆஸ்ராமம் திருவேங்கட விண்ணவப்பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசாமி கோவில், வடசேரி பாலகிருஷ்ணன் கோவில், கோட்டார் வாகையடி ஏழகரம் பெருமாள் கோவில், வட்டவிளை தென்திருப்பதி வெங்கடாசலபதி கோவில், சுசீந்திரம் இரட்டைத்தெரு குலசேகர பெருமாள் கோவில், சுசீந்திரம் இரட்டைத்தெரு குலசேகர பெருமாள் கோவில், பார்த்திவபுரம் பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பெருமாள் கோவில்களுக்கு சென்று சாமிதரிசனம் செய்தனர்.

Next Story