கள்ளக்காதலை கைவிடாததால் பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்த பெயிண்டர் கைது


கள்ளக்காதலை கைவிடாததால் பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்த பெயிண்டர் கைது
x
தினத்தந்தி 20 Sept 2020 9:37 AM IST (Updated: 20 Sept 2020 9:37 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே, கள்ளக்காதலை கைவிடாததால் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்த பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கன்னடம்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 37). பெயிண்டர். இவருடைய மனைவி நந்திஈஸ்வரி (29). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் நந்திஈஸ்வரிக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேச தொடங்கினர். நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

ஒருகட்டத்தில் மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் ராஜ்குமாருக்கு தெரியவந்தது. உடனே அவர் கள்ளக்காதலை கைவிடும்படி தனது மனைவியிடம் பலமுறை கூறி கண்டித்துள்ளார். ஆனாலும் அதனை கேட்காமல் ராஜ்குமார் வேலைக்கு சென்றதும், அந்த வாலிபருடன் தனது உறவை நந்திஈஸ்வரி தொடர்ந்துள்ளார்.

பிளேடால் அறுத்தார்

இந்த நிலையில் நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு ராஜ்குமார் திரும்பி வந்தார். அப்போது வீட்டில் இருந்து அந்த வாலிபர் வெளியே சென்றதை பார்த்து ராஜ்குமார் ஆத்திரமடைந்தார். உடனே வீட்டுக்குள் சென்று தனது மனைவியை கண்டித்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ராஜ்குமார் வீட்டில் இருந்த பிளேடை எடுத்து நந்திஈஸ்வரியின் கழுத்தை அறுத்தார்.

நந்திஈஸ்வரியின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டுக்கொண்டு வெளியேறியது. இதனால் அவர் வலி தாங்காமல் அலறினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதைப்பார்த்த ராஜ்குமார் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். பின்னர் அவரே வேடசந்தூர் போலீஸ் நிலையம் சென்று தனது மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டதாக கூறி சரண் அடைந்தார்.

கைது

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நந்திஈஸ்வரியின் நிலை குறித்து அறிவதற்காக கன்னடம்பட்டிக்கு விரைந்து சென்றனர். அப்போது வீட்டுக்குள் கழுத்தில் ரத்தம் வழிந்த நிலையில் அவர் அமர்ந்திருப்பதை பார்த்த போலீசார் உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கள்ளக்காதலை கைவிடாததால் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story