ராமேசுவரம், பாம்பனில் பலத்த காற்று: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை


ராமேசுவரம், பாம்பனில் பலத்த காற்று: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை
x
தினத்தந்தி 20 Sep 2020 9:15 AM GMT (Updated: 20 Sep 2020 9:08 AM GMT)

ராமேசுவரம், பாம்பனில் பலத்த காற்று வீசி வருவதால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ராமேசுவரம்,

தமிழகத்தில் சில மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும், குறிப்பாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதோடு கடல் சீற்றமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

இந்த நிலையில் ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதியில் நேற்று காலை முதலே பலத்த காற்று வீசியது. இதுபோல் தனுஷ்கோடி பகுதியிலும் பலத்த காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகிறது. எனவே மறு அறிவிப்பு வரும் வரை மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன் துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பலத்த காற்று காரணமாக பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி இருந்த ஒரு மீன்பிடி விசைப்படகின் நங்கூர கயிறு அறுந்து கரையோரம் உள்ள கடல் பகுதியில் தரைதட்டிய நிலையில் நின்றது. அந்த படகை மீட்டு ஆழமான கடல் பகுதிக்கு கொண்டு சென்ற மீனவர்கள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.

Next Story