மின்சாரம், குடிநீருக்கான நிலுவைத்தொகை செலுத்தும் சிறப்பு முகாமில் ரூ.3 கோடி வசூல்
திருப்பரங்குன்றம் யூனியனில் மின்சாரம் குடிநீருக்கான நிலுவை செலுத்தும் சிறப்பு முகாம் நடந்தது. இதில் ரூ.3 கோடி வசூலானது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனில் 38 ஊராட்சிகள் அமைந்துள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு மக்கள் பயன்பாட்டுக்காக தெருவிளக்குக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் வசதியை ஊராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது இதற்காக மின்சார வாரியம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு உரிய கட்டணத்தை 38 ஊராட்சிகளும் தொடர்ந்து பணம் செலுத்தி வந்தன. இருப்பினும் கடந்த சில மாதங்கள் பணம் செலுத்தாத நிலை இருந்து வந்தது. இதனையொட்டி சம்பந்தப்பட்ட துறையினர் நிலுவைத் தொகையை செலுத்துமாறு வலியுறுத்தினர்.
இந்தநிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் வினய் ஊராட்சிகள் மூலம் நிலுவை தொகையை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைதொடர்ந்து திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் மதுரை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை தலைமையில் மின்சாரம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. ஆணையாளர் ஆசிக், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் 38 ஊராட்சிகளின் செயலர்கள் கலந்து கொண்டு அவரவர் ஊராட்சிகளில் இருந்த நிலுவைத் தொகையை மின்சாரம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு காசோலையாக வழங்கினர். அதில் மின்சார வாரியத்திற்கு ரூ.2 கோடியே 81 லட்சமும், குடிநீர் வடிகால் வாரியத்திற்கு 10 லட்சத்து 9 ஆயிரமும் வழங்கினார்கள்.
இதில் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன்அலுவலக தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவநாத் பாபு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், மகாலட்சுமி, நாகலட்சுமி முத்தையா மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் ஸ்டீபன், உதவி பொறியாளர்கள் ரத்தினம், சரவணன் மற்றும் மின்வாரிய பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story