செய்யாறு அருகே, திருமணம் செய்து வைக்காத தாயை வெட்ட முயன்ற வாலிபர் - தடுத்த 4 பேருக்கு கத்தி வெட்டு
திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் தாயை வெட்ட முயன்றபோது தடுத்த 4 பேருக்கு வெட்டு விழுந்தது.
செய்யாறு,
வெம்பாக்கம் தாலுகா அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன். கூலி தொழிலாளி. இவருக்கு மஞ்சுளா என்கிற மனைவியும், கிருஷ்ணமூர்த்தி என்கிற மகனும் உள்ளனர். வாலிபர் கிருஷ்ணமூர்த்தி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கத்துக்கு ஆளான கிருஷ்ணமூர்த்தி தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி பெற்றோர்களிடம் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இரவு குடித்துவிட்டு வந்த கிருஷ்ணமூர்த்தி, பெற்றோர்களிடம் சண்டையிட்டு உள்ளார். வாக்குவாதம் அதிகரிக்கவே ஆத்திரத்தில் கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்த கத்தியை எடுத்து தாய் மஞ்சுளாவை வெட்ட பாய்ந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் கிருஷ்ணமூர்த்தியை தடுக்க முயன்றுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி தடுக்க வந்தவர்களை போதையில் கத்தியால் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த ஜெயம்மாள், விநாயகம், ராமலிங்கம், வரதன் ஆகியோர் அரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து விநாயகம் கொடுத்த புகாரின் பேரில் பிரம்மதேசம் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி (வயது 27) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story