விழுப்புரம்- கடலூர் மாவட்ட தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.25¼ கோடியில் புதிய அணைக்கட்டு - அமைச்சர் சி.வி.சண்முகம், விவசாய பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்


விழுப்புரம்- கடலூர் மாவட்ட தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.25¼ கோடியில் புதிய அணைக்கட்டு - அமைச்சர் சி.வி.சண்முகம், விவசாய பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 20 Sept 2020 7:15 PM IST (Updated: 20 Sept 2020 7:09 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம்- கடலூர் மாவட்ட தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.25¼ கோடியில் புதியதாக கட்டப்பட்ட அணைக்கட்டை அமைச்சர் சி.வி.சண்முகம், விவசாய பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே ஓடும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே 2 மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதியதாக அணைக்கட்டு கட்ட அரசால் ரூ.25 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை அமைப்பு) சார்பில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதிய அணைக்கட்டு கட்டும் பணி கடந்த 30.1.2019 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது அணைக்கட்டு பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த அணைக்கட்டானது 400 மீட்டர் நீளமும், 3.1. மீட்டர் உயரமும் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய அணைக்கட்டின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், முத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு புதிய அணைக்கட்டின் மதகுகளை விவசாய பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், இந்த அணைக்கட்டின் இருபுறமும் பக்கத்திற்கு மூன்று மணற்போக்கிககள் வீதம் 6 மணற்போக்கிகளை கொண்டது. இந்த அணைக்கட்டு வினாடிக்கு 146215.00 கனஅடி நீர் வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும் இருபுறங்களிலும் அமையப்பெற்றுள்ள மணற்போக்கிகள் மூலம் வினாடிக்கு 5105.00 கனஅடி நீர் வெளியேற்றும் திறன் கொண்டது.

இங்கு அணைக்கட்டு கட்டப்பட்டதன் மூலம் இந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் செறிவூட்டப்பட்டு பெண்ணையாற்றின் இரு பகுதிகளில் உள்ள விழுப்புரம் மாவட்டம் தளவானூர், கொங்கரகொண்டான், திருப்பாச்சனூர், வெளியம்பாக்கம், சித்தாத்தூர்திருக்கை, அரசமங்கலம், கள்ளிப்பட்டு, பூவரசன்குப்பம் ஆகிய 8 கிராமங்களும், கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம், காவனூர், உளுந்தம்பட்டு, அவியனூர், கரும்பூர் ஆகிய 5 கிராமங்களும் என மொத்தம் 13 கிராமங்கள் மற்றும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள 87 திறந்தவெளி கிணறுகள் இந்த அணைக்கட்டால் பயன்பெறும்.

அதுமட்டுமின்றி இந்த அணைக்கட்டால் 2114.14 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அதேபோல் மலட்டாறு, வாலாஜா கால்வாய் மற்றும் எனதிரிமங்கலம் கால்வாய்களில் தண்ணீர் செல்வதன் மூலம் பாசனம் மேம்படும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்றார். இவ்விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி என்கிற ரகுராமன், ஆவின் தலைவர் பேட்டை முருகன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுமதி, உதவி பொறியாளர்கள் ஞானசேகர், ஜெகதீசன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜி.ஜி.சுரேஷ்பாபு, ராமதாஸ், பெரும்பாக்கம் ராஜா, எசாலம்பன்னீர், கோலியனூர் ஒன்றிய அவைத்தலைவர் மனோகரன், ஒன்றிய துணை செயலாளர் சீத்தாகலியபெருமாள், கிளை செயலாளர்கள் பரமசிவம், சந்திரன், ராமதாஸ், தளவானூர் பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story