கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில், டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்த வாலிபர்கள் கைது - பெரம்பலூர், நாமக்கல், கரூர் மாவட்டங்களிலும் கைவரிசை


கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில், டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்த வாலிபர்கள் கைது - பெரம்பலூர், நாமக்கல், கரூர் மாவட்டங்களிலும் கைவரிசை
x
தினத்தந்தி 20 Sept 2020 7:30 PM IST (Updated: 20 Sept 2020 7:17 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்துச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களிலும் டாஸ்மாக் ஊழியர்களிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

சின்னசேலம்,

கடந்த சிலநாட்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை அருகே எடக்கல் பகுதியில் டாஸ்மாக் கடை விற்பனையாளர் மற்றும் இவரது உதவியாளர் ஆகியோரை மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி பணம்பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தவிர சின்னசேலம் அருகே நைனார்பாளையம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளர்களை தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.

அடுத்தடுத்து டாஸ்மாக் ஊழியர்களை மர்மநபர்கள் தாக்கி பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தால் கொள்ளையர்களுக்கு அஞ்சி டாஸ்மாக் ஊழியர்கள் டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணிக்கே மூடிவிட்டு சென்று விடுகின்றனர்.

இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சின்னசேலம் அருகே வீ கூட்ரோடு பகுதியில் சில மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டுவதாக வந்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால், ஆரோக்கியதாஸ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை, மற்றும் முருகன், விஜய், தங்கதுரை உள்ளிட்ட தனிப்படை போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கொடுத்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சின்னசேலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே நான் நாகாத்தி கிராமம், மேலத்தெருவை சேர்ந்த நிதிச்செல்வன் என்பவரது மகன்களான பிரதீஷ்(வயது 22), பிரசாந்த் (20), என்பதும் சின்னசேலம் அருகே நைனார்பாளையம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் விற்பனையாளர்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்தது, உளுந்தூர்பேட்டை அருகே எடக்கல் டாஸ்மாக் விற்பனையாளர் உள்பட 2 பேரை தாக்கி பணத்தை கொள்ளையடிக்க முயன்றது, விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் பகுதியில் டாஸ்மாக் விற்பனையாளர்களை தாக்கி பணத்தை கொள்ளை அடித்தது, அதேபோல் பெரம்பலூர், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்ததையும் ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து பிரதீஷ், பிரசாந்த் ஆகியோரை கைதுசெய்த போலீசார், இருவரிடம் இருந்தும் மோட்டார் சைக்கிள், ரூ.6 ஆயிரத்து 500, ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story