66 தனியார் விற்பனை நிலையங்களில் ரூ.1 கோடி மதிப்புள்ள 130 டன் விதைகள் விற்பனைக்கு தடை - அதிகாரிகள் நடவடிக்கை


66 தனியார் விற்பனை நிலையங்களில் ரூ.1 கோடி மதிப்புள்ள 130 டன் விதைகள் விற்பனைக்கு தடை - அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Sept 2020 7:36 PM IST (Updated: 20 Sept 2020 7:36 PM IST)
t-max-icont-min-icon

66 தனியார் விற்பனை நிலையங்களில் ரூ.1 கோடி மதிப்புள்ள 130 டன் விதைகள் விற்பனைக்கு தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விழுப்புரம், 

விழுப்புரத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான சான்று பெற்ற விதைகள் இருப்பு மற்றும் விலை விவரம் குறித்து கோவை விதைச்சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை இயக்குனர் சுப்பையா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது விதை விற்பனையாளர்கள் விதைச்சட்டத்தின்படி விலை பட்டியல் விபர பலகை, கொள்முதல் பதிவேடு, விதை இருப்பு பதிவேடு, விற்பனை ரசீது மற்றும் விதையின் முளைப்புத்திறன் பகுப்பாய்வு முடிவுகள், தனியார் விதைக்கான பதிவுச்சான்று ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். மேலும் விதைச்சட்டத்தை மீறி செயல்படும் விதை விற்பனை நிலையங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் விதைச்சான்று இயக்குனர் சுப்பையா கூறுகையில், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இதுவரை 2,232 விதை விற்பனை நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு விதைக்குவியல்களில் இருந்து 2,360 விதை மாதிரிகள் முளைப்புத்திறன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு 21 தரமற்ற விதை மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளது. விதைச்சட்டத்தை மீறி செயல்பட்ட காரணத்திற்காக 66 தனியார் விதை விற்பனை நிலையங்களில் உள்ள 130 டன் விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 19 லட்சத்து 52 ஆயிரமாகும் என்றார்.

அதனை தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள விதைச்சான்றுத்துறை அலுவலகத்தில் விதைச்சான்று அலுவலர்கள், விதை ஆய்வாளர்கள் மற்றும் விதை பரிசோதனை அலுவலர்களின் பணிகளை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் மல்லிகா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story