கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பில் பாரபட்சம் - பா.ஜ.க. விவசாய அணி தலைவர் நாகராஜன் குற்றச்சாட்டு


கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பில் பாரபட்சம் - பா.ஜ.க. விவசாய அணி தலைவர் நாகராஜன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 Sept 2020 8:00 PM IST (Updated: 20 Sept 2020 8:05 PM IST)
t-max-icont-min-icon

கோமுகி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டத்தில் பாரபட்சம் உள்ளதாக பா.ஜ.க. மாநில விவசாயி அணி தலைவர் நாகராஜன் குற்றம்சாட்டினார்.

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க. விவசாய பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் கோமுகி அணையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் ஹரி கோபால் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் தியாகராஜன், அரசுத்தரப்பு மாவட்ட தலைவர் யோகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில விவசாய அணி துணைத் தலைவர் பாலாஜி வரவேற்றார். மாநில விவசாய அணி தலைவர் நாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் வாய்க்காலின் குறுக்கே தடுப்பை உருவாக்கி ஒரு குறிப்பிட்ட நபர்களின் விவசாய நிலத்துக்கு மட்டும் தினசரி தண்ணீர் கிடைக்கும் வகையில் வழிவகை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடத்தூர் பகுதியில் உள்ள வயல்களுக்கு தண்ணீர் செல்வது தடைபடுகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

மேலும் பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ள நலத்திட்டங்கள் விவசாயிகளுக்கு கிடைக்காமல் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இது குறித்தும், கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு ஒரு தலைபட்சமாக தண்ணீர் திறந்துவிடுவது குறித்தும் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடைபெறும். கிசான் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மேலும் விவசாயிகளுக்கு ரூ.2 கோடி வரை கடன் கிடைக்கும் வகையில் திட்டம் உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள், விவசாய அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story