நீலகிரி மாவட்டத்தில் 4,800 விவசாயிகளுக்கு அங்கக சான்று - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல்
நீலகிரி மாவட்டத்தில் 4,800 விவசாயிகளுக்கு அங்கக சான்று வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
ஊட்டி,
நீலகிரியில் சுற்றுச்சூழல் பாதுகாத்திடவும் பொதுமக்கள் அனைவரும் ஆரோக்கியமான உணவை உட்கொண்டு வாழ இயற்கை முறையில் விவசாயம் செய்யும் மாவட்டமாக மாற்றுவதற்கு 2018-ம் ஆண்டு தமிழக அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர இயற்கை முறை சாகுபடி குறித்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ரசாயன பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, பூஞ்சாணக் கொல்லிகளின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் தோட்டக்கலைத் துறையின் நடவடிக்கைகளின் மூலம் அங்கக வேளாண் பொருட்களின் வரத்து சந்தைகளில் அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் அங்கக வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் வேளாண் விற்பனையில் விவசாய பெருமக்கள் அதிக லாபம் பெற அங்கக தரச்சான்று முக்கியமானதாகும்.
இதை கருத்தில் கொண்டு தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் 48 உழவர் உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள 4,800 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையின் கீழ் அங்கக சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஒவ்வொரு குழுவும் ரூ.7,100 வீதம் தமிழ்நாடு அங்கக சான்றிதழ் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள 48 இயற்கை விவசாய குழுக்கள் செயல்படும் விதம் குறித்து தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையினர் 2-ம் கட்டங்களாக ஆய்வு நடத்தி வருகின்றனர். தற்போது குன்னூர் தாலுகாவில் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு அங்கக வேளாண்மை சான்று துறையினர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியில் துறையை சார்ந்த சாம்ரவேல், ராஜ்குமார் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தூதூர் மட்டம், ஜெகதளா மற்றும் காரக்கொரை கிராமத்தைச் சேர்ந்த விவசாய நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் ஆகிய தாலுகாக்களில் தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையினர் மேற்கொள்ள உள்ளனர். ஆய்வு முடிவுகள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கக சான்றளிப்பு குழு உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். பின்னர் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அங்க வாய்ப்பு சான்றிதழ் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மற்றும் www.tnhortinet.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் அங்கக வேளாண்மைச் சான்றிதழ் பெற அங்ககச் சான்று துறையின் கீழ் www.tnocd.net என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் பதிவு செய்த விவரங்களுடன் அந்தந்த பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story