இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு: கைதான வாலிபருக்கு கொரோனா - போலீஸ் தேடிய நபர் கோர்ட்டில் சரண்


இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு: கைதான வாலிபருக்கு கொரோனா - போலீஸ் தேடிய நபர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 20 Sep 2020 4:15 PM GMT (Updated: 20 Sep 2020 4:19 PM GMT)

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த வழக்கில் தேடப்பட்ட நபர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

கோவை,

கோவை ஆவாரம்பாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் பிஜு (வயது37). இந்து முன்னணி பிரமுகர். இவர் ராம்நகர் பகுதியில் சோடா கடை நடத்தி வந்தார். இவர், அந்த பகுதியில் நடைபெறும் பிரச்சினைகளில் தலையிட்டு தீர்த்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த நிதீஷ்குமார் (20) என்பவரை 2 பேர் கத்தியால் குத்தினர். இதில் தொடர்புடையவர்களை காப்பாற்ற முயன்றதாக சந்தேகப்பட்ட ஒரு கும்பல் பிஜுவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றது. இந்த கொலை தொடர்பாக கார்த்தி, ராஜா, பிரவீன், அரவிந்த், விவேக் பிரபு, இளையராஜா ஆகிய 6 பேரை காட்டூர் போலீசார் கைது செய்து பொள்ளாச்சி சிறையில் போலீசார் அடைத்தனர்.

இதற்கிடையே கைதான 6 பேருக்கும் சிறை அதிகாரி உத்தரவின்பேரில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இளையராஜாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. எனவே அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டு பொள்ளாச்சியில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச் சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலைக்கு சதி திட்டம் தீட்டியதாக கத்திகுத்தில் காயம் அடைந்த நிதீஷ்குமாரின் தந்தை ஆறுமுகத்தை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் கோவையில் இருந்து தப்பி சென்று சிவகங்கை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

இது குறித்து கோவை போலீஸ் அதிகாரிகூறுகையில் சரண் அடைந்த ஆறுமுகம், இந்த வழக்கில் முதல் குற்றவாளி ஆவார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் விரைவில் மனுதாக்கல் செய்ய உள்ளோம். தலைமறைவாக உள்ள 3 பேரை வலைவீசி தேடி வருகிறோம்“ என்றார்.

Next Story