சாலை விரிவாக்கத்துக்கு இடையூறாக இருந்த கிணற்றை மூடக்கோரி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு


சாலை விரிவாக்கத்துக்கு இடையூறாக இருந்த கிணற்றை மூடக்கோரி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Sep 2020 4:38 PM GMT (Updated: 20 Sep 2020 4:38 PM GMT)

திருப்பூரில் சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக இருக்கும் கிணற்றைமூடக்கோரி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுப்பர்பாளையம், 

திருப்பூர் அவினாசி ரோடு ஆஷர்நகர் விரிவு பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அங்கு குறிப்பிட்ட ஒரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கிணறு சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்து வந்தது. இதனால் அந்த கிணற்றை மூடிவிட்டு, சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர்களான 2 பேரில் ஒருவர் கிணற்றை மூடக்கூடாது என்று கூறினார்.

இதுதொடர்பாக வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கிணற்றை மூட முடிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று அந்த கிணற்றை மூடுவதற்காக பொக்லைன் எந்திரம் அங்கு வரவழைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற தனியார் நபர் கிணற்றை மூடக்கூடாது என்று மீண்டும் வலியுறுத்தினார். கிணற்றை மூட வேண்டும் என்று கூறி பொதுமக்களும் அங்கு திரண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அனுப்பர்பாளையம் போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் இடத்திற்கு சொந்தமான தனியாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர் கிணற்றை மூட சம்மதம் தெரிவித்தார். இதன் பின்னர் பொக்லைன் எந்திரம் மூலமாக கிணறு மண்ணால் மூடப்பட்டது. பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story