கொரோனாவால் கடும் பாதிப்பு - 30 சதவீத பணியே நடக்கிறது : தீபாவளி ஆர்டர் வராததால் பாத்திர உற்பத்தியாளர்கள் கவலை


கொரோனாவால் கடும் பாதிப்பு - 30 சதவீத பணியே நடக்கிறது : தீபாவளி ஆர்டர் வராததால் பாத்திர உற்பத்தியாளர்கள் கவலை
x
தினத்தந்தி 20 Sept 2020 10:30 PM IST (Updated: 20 Sept 2020 10:11 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு காரணமாக தீபாவளி ஆர்டர்கள் வராததால் 30 சதவீதமே பாத்திர உற்பத்தி நடைபெறுகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

அனுப்பர்பாளையம்,

டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூரில் பின்னலாடை தொழிலுக்கு அடுத்தபடியாக பாத்திர தொழில் பிரதான தொழிலாக அமைந்துள்ளது. திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான அனுப்பர்பாளையம்புதூர், ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், திலகர்நகர், அங்கேரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட பாத்திர பட்டறைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் எவர்சில்வர், செம்பு, பித்தளை பாத்திரங்கள் தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 5 மாதங்களுக்கும் மேலாக தொடர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டாலும் பொருளாதார வீழ்ச்சி, பணப்புழக்கமின்மை, பொது போக்குவரத்து முடக்கம், பணியாளர்கள் பணிக்கு திரும்பாதது உள்பட பல்வேறு காரணங்களால் பாத்திர தொழில் முற்றிலுமாக முடங்கியது.

இந்த நிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஊரடங்கு முற்றிலுமாக தளர்த்தப்பட்டது. இதையடுத்து ஆண்டுதோறும் வரும் தீபாவளி ஆர்டர்கள் வரத்தொடங்கும் என்ற எதிர்பார்ப்புடன் பாத்திர உற்பத்தியாளர்கள் இருந்தனர். ஆனால் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 வாரங்களே உள்ள நிலையில் எதிர்பார்த்த ஆர்டர்கள் வராததால் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தற்போது ஒருசில ஆர்டர்களைக் கொண்டு 30 சதவீதம் மட்டுமே தற்போது பாத்திர பட்டறைகள் இயங்கி வருகின்றன. அந்த பணிகளை செய்வதற்கும் சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திரும்பாததால் ஆள்பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் பாத்திர பட்டறை உரிமையாளர்கள் கவலைக்குள்ளாகி உள்ளனர். இதேபோல் பொதுமக்களிடம் பணப்புழக்கம் இல்லாததால் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான பாத்திர கடைகளில் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாக காணப்படுகிறது.

இதுகுறித்து அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்த பாத்திர பட்டறை உரிமையாளர் தியாகு கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு என்பது பாத்திர தொழில் வரலாற்றிலேயே மிகப்பெரிய பாதிப்பாகும். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தொழில் முற்றிலுமாக முடங்கி போய் உள்ளது. இதன் காரணமாக பாத்திர பட்டறை உரிமையாளர்களும், தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு, அனைத்து தொழில்களும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கி உள்ளன. ஆனாலும் பாத்திர தொழில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.

தற்போது வரை பித்தளை அண்டா வகைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. 100 சதவீதம் இயங்க வேண்டிய பட்டறைகளில் 30 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன.

சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களின் பலர் இன்னும் திரும்பாததால் கையில் உள்ள ஆர்டர்களையும் முடிக்க முடியாத நிலை உள்ளது. வழக்கமான ஆர்டர்களும் இல்லாத சூழலில் தீபாவளி ஆர்டர்களாவது வரும் என்று எதிர்நோக்கி உள்ளோம். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு 2 மாதங்களுக்கு முன்பாகவே ஆர்டர்கள் வரத்தொடங்கி விடும்.

ஆனால் இன்னும் 6 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் நாங்கள் எதிர்பார்த்த ஆர்டர்கள் இன்னும் வரவில்லை. தீபாவளி பண்டிகைக்காக ஒவ்வொரு பட்டறைகளுக்கும் கோவை, பொள்ளாச்சி, உடுமலை, சேலம், ஈரோடு உள்பட தமிழகம் முழுவதும் இருந்து 10 ஆர்டர்கள் வரும் என்றால் தற்போது ஒருசில ஆர்டர்கள் மட்டுமே வருகின்றன.

குறிப்பாக திருப்பூரில் தீபாவளி பண்டிகைக்காக நடத்தப்படும் பலகாரச் சீட்டிற்காக ஆயிரக்கணக்கான பாத்திர ஆர்டர்கள் வரும். ஆனால் இந்த ஆண்டு 6 மாதங்கள் கொரோனா பாதிப்பிலேயே சென்று விட்டதால் பலகார சீட்டில் சேர்ந்தவர்களில் ஏராளமானோர் பணம் கட்டவில்லை. பலர் சீட்டிற்கு கட்டிய தொகையை திரும்ப பெற்றுக் கொண்டு சீட்டில் இருந்து வெளியே சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பலகார சீட்டு நடத்துபவர்கள் ஆண்டுதோறும் வழக்கமாக கொடுக்கும் பாத்திர ஆர்டர்களும் வருமா? என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

அடுத்த 2 வாரங்களில் தீபாவளி ஆர்டர்கள் வந்தாலும் வழக்கமான அளவு இல்லாமல் இந்த ஆண்டு 30 முதல் 40 சதவீத ஆர்டர்கள் மட்டுமே வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இதேபோல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தம் செய்யப்படும் கூலி உயர்வு அறிவிக்கப்பட்டு, பாத்திர உற்பத்தி சீராக தொடங்க 3 மாதங்கள் ஆகும். இந்த ஆண்டு கூலி உயர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர், உடனடியாக கொரோனா பாதிப்பும் வந்து விட்டதால் பாத்திர உற்பத்தியாளர்கள் கடந்த பல மாதங்களாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆண்டுதோறும் தீபாவளி ஆர்டர்களை 2 மாதங்கள் இரவும், பகலுமாக உற்பத்தி செய்து கொடுத்து, மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வந்த பாத்திர பட்டறை உரிமையாளர்களும், தொழிலாளர்களும் கொரோனா பாதிப்பின் காரணமாகவும், போதிய ஆர்டர்கள் இல்லாததாலும் பெரும் கவலைக்குள்ளாகி உள்ளனர்.

Next Story