அத்தியாவசிய பட்டியலில் வெங்காயம், உருளைக்கிழங்கு சேர்க்க வேண்டும் - விக்கிரமராஜா வலியுறுத்தல்


அத்தியாவசிய பட்டியலில் வெங்காயம், உருளைக்கிழங்கு சேர்க்க வேண்டும் - விக்கிரமராஜா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Sep 2020 11:00 PM GMT (Updated: 20 Sep 2020 8:02 PM GMT)

அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் வெங்காயம், உருளைக்கிழங்கை சேர்க்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். இதுகுறித்து அவர் நேற்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது.

நெல்லை,

நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால் வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை அத்தியாவசிய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இவற்றை பெரிய நிறுவனங்கள் பதுக்கல் செய்து, அதிக விலைக்கு விற்க வாய்ப்பு உள்ளது. இது ஏழை எளிய நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். குறிப்பாக விவசாயிகள் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். எனவே உருளைக்கிழங்கு, பல்லாரியை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்க வேண்டும்.

தமிழகத்தில் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாக, நாங்கள் ஏற்கனவே போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்கும் போராட்டம் நடத்தினோம். எனினும் தமிழகத்தில் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைதான் நிலவுகிறது. எனவே வியாபாரிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்துவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட கடைகள் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு, தற்காலிக சந்தையாக செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் 95 சதவீத காய்கறி மார்க்கெட்டுகள் ஏற்கனவே செயல்பட்டு வந்த இடத்திற்கே மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில்கூட மீண்டும் மார்க்கெட் செயல்படத் தொடங்கி உள்ளது.

ஆனால் நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், பழைய கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடங்கள் கட்டுவதால், அங்கு கடை வைத்திருந்த வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 500 கடைகள் அகற்றப்பட்டதால், அவற்றை நம்பியிருந்த 5 ஆயிரம் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து வணிகர்கள் தவித்து வருகின்றனர். எனவே மார்க்கெட்டில் மீண்டும் கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் ஏராளமான வணிகர்கள் இறந்துள்ளனர். கொரோனா காலத்தில் போலீசார், தூய்மை பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோரைப் போன்று வணிகர்களும் பொதுமக்களுக்காக சேவையாற்றினர். எனவே கொரோனாவால் இறந்த வணிகர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்.

தமிழகத்தில் வணிகர்களுக்கு எதிராக போலீசார் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். சி.பி.ஐ.யிடம் வழக்கு சென்றால் உரிய நீதி கிடைக்காமல் போகும் என்ற போக்கை மாற்றும் வகையில், சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சரியான நீதி கிடைக்க வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் குறிப்பிட்ட கால அளவு நிர்ணயித்து விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். தற்போது தட்டார்மடம் வியாபாரி செல்வன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் காவல்துறை அதிகாரி என்றாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பாளையங்கோட்டையில் நகர தொழில் வர்த்தக சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் ராம்தாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் சோமு, பொருளாளர் மாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க மாவட்ட செயலாளர் அருள் இளங்கோ வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். நெல்லை மண்டல தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் விநாயகம், மாநகர தலைவர் குணசேகரன், மாநகர செயலாளர் ஸ்டீபன் பிரேம்குமார், மாநில இணை செயலாளர் நயன்சிங், தென்காசி மாவட்ட தலைவர் வைகுண்டராஜா, மாநில பொருளாளர் பன்னீர்செல்வம், துணை தலைவர்கள் சீனியப்பன், ரமேஷ், துணை செயலாளர் கனகராஜ், சல்வடோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story