புதுவையில் ஆன்லைன் வகுப்புகள் ரத்து இல்லை கல்வித்துறை இயக்குனர் தகவல்


புதுவையில் ஆன்லைன் வகுப்புகள் ரத்து இல்லை கல்வித்துறை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 21 Sept 2020 5:33 AM IST (Updated: 21 Sept 2020 5:33 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் ரத்து இல்லை என்று கல்வித்துறை இயக்குனர் தெரிவித்தார்.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் அடுத்தடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து தகவல் எதுவும் இதுவரை வரவில்லை.

இதையொட்டி தற்போது 9, 10, 11, 12-ம் வகுப்புகள் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்பட்டு வருகின்றன. முதலாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அந்தந்த பள்ளிகள் சார்பில் பாட விவரம் குறித்து யூ-டியூப் லிங்க் வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதில் உள்ள வீடியோ காட்சிகளை வைத்து மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதே போல் கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன.

இந்த முறையில் படிப்பதால் மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதாக புகார் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஐகோர்ட்டு பல்வேறு வழிகாட்டுதலை அறிவித்தது. அதன் அடிப்படையில் தமிழகம், புதுவையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வுகள் முடிக்கப்பட்டு மாத இறுதியில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் இன்று (திங்கட் கிழமை) முதல் வருகிற 25-ந் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த 5 நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட மாட்டாது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

புதுவை மாநிலத்திலும் தமிழகத்தை பிற்பற்றி ஆன்லைன் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை விடப்படும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது.

இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடுவிடம் கேட்ட போது, ‘புதுவை மாநிலத்தில் தற்போது ஐகோர்ட்டு வழிகாட்டுதலின் படி தான் பள்ளி, கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு வகுப்புக்கும் மற்றொரு வகுப்புக்கும் 1 மணி நேரம் இடைவெளி விட்டு நடத்தப்படுகிறது. புதுவையில் மாணவர்கள் மனஉளைச்சல் இல்லாமல் கல்வி கற்று வருகின்றனர். எனவே புதுவை மாநிலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை கிடையாது. தொடர்ந்து நடைபெறும்’ என்றார்.

Next Story