மங்களமேடு அருகே பரிதாபம்: கார் மரத்தில் மோதியதில் 2 பேர் பலி


மங்களமேடு அருகே பரிதாபம்: கார் மரத்தில் மோதியதில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 21 Sept 2020 6:16 AM IST (Updated: 21 Sept 2020 6:16 AM IST)
t-max-icont-min-icon

மங்களமேடு அருகே கார் மரத்தில் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மங்களமேடு,

சென்னை அகரம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுகுமார்(வயது 35). இவரும், சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த லட்சுமிகாந்தன்(42), சென்னை பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்த மரியடயானா(40) ஆகியோரும் சென்னையில் கருத்தரித்தல் மையத்திற்கு தேவையான உபகரணங்களை விற்கும் தொழில் செய்து வருகின்றனர்.

அவர்கள் 3 பேரும் நேற்று காலை தொழில் சம்பந்தமாக ஒரு காரில் சென்னையில் இருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்தனர். காரை லட்சுமிகாந்தன் ஓட்டினார். காலை 9.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு மின்சார வாரிய அலுவலகம் அருகே வந்தபோது, திடீரென டயர் வெடித்ததில் நிலைதடுமாறிய கார், லட்சுமிகாந்தனின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையோர பள்ளத்தில் இருந்த புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

2 பேர் சாவு

மேலும் லட்சுமிகாந்தன் மற்றும் விஷ்ணுகுமார், மரிய டயானா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மங்களமேடு போலீசார், 3 பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு விஷ்ணுகுமார், லட்சுமிகாந்தன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மரிய டயானா மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story