பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் தேங்கும் கழிவுநீர் வரகனேரி அருகே பொதுமக்கள் மறியல்; போக்குவரத்து பாதிப்பு


பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் தேங்கும் கழிவுநீர் வரகனேரி அருகே பொதுமக்கள் மறியல்; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 21 Sept 2020 6:49 AM IST (Updated: 21 Sept 2020 6:49 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி வரகனேரி அருகே சாலையில் தேங்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். அதை சீரமைக்க கோரி பொதுமக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி- தஞ்சாவூர் சாலையில் வரகனேரி அருகே பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அந்த பகுதியில் தேங்கி பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. மெயின்ரோட்டில் இவ்வாறு தேங்கும் சாக்கடை நீரால் அந்த சாலையில் செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் திறந்தவெளி சாக்கடையில் சிலர் விழுந்து காயம் அடைந்து உள்ளனர். இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் சாக்கடை அடைப்பு சீரமைக்கப்படவில்லை.

சாலைமறியல்

இதனை கண்டித்து நேற்று இரவு 7 மணி அளவில் வெல்பேர் கட்சி தலைவர் ஜமால் முகமது தலைமையில் செயலாளர் அப்பாஸ் மந்திரி, வியாபாரிகள் சங்க தலைவர் கமலக்கண்ணன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி- தஞ்சாவூர் சாலையில் சுமார் 30 நிமிட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோட்டை சரக உதவி போலீஸ் கமிஷனர் ரவி அபிராம் மற்றும் காந்தி மார்க்கெட் போலீசார் அங்கு விரைந்து வந்து சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டாலும் தொடர்ந்து அந்த பகுதியில் நின்று கொண்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இங்கு வந்து சாக்கடை பிரச்சினையை தீர்த்து வைப்போம் என உறுதி அளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கோஷம் போட்டுக் கொண்டே இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story