அதிகாலையில் ஆழ்ந்த தூக்கத்தில் நேர்ந்த துயர சம்பவம்: தானே அருகே பிவண்டியில் கட்டிடம் இடிந்து 13 பேர் பலி 20 பேர் காயத்துடன் மீட்பு


அதிகாலையில் ஆழ்ந்த தூக்கத்தில் நேர்ந்த துயர சம்பவம்: தானே அருகே பிவண்டியில் கட்டிடம் இடிந்து 13 பேர் பலி 20 பேர் காயத்துடன் மீட்பு
x
தினத்தந்தி 22 Sept 2020 5:37 AM IST (Updated: 22 Sept 2020 5:37 AM IST)
t-max-icont-min-icon

தானே அருகே பிவண்டியில் நேற்று அதிகாலை வேளையில் 3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 13 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

மும்பை,

தானே மாவட்டம், பிவண்டியில் தமன்கர் நாக்கா அருகே நார்போலி பட்டேல் காம்பவுண்ட் உள்ளது.

இங்குள்ள ‘ஜிலானி’ என்ற 3 மாடி கட்டிடத்தில் இருந்த 40 வீடுகளில் சுமார் 150 பேர் வசித்து வந்தனர். நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதிர்வை உணர்ந்து கண் விழிக்கும் முன்பே பலர் இடிபாடுகளுக்குள் புதைந்தனர். பலர் உயிருக்கு போராடி மரண ஓலம் எழுப்பினர்.

கட்டிடம் இடிந்த சத்தம்கேட்டு அருகில் வசிப்பவர்கள் பதற்றத்துடன் எழுந்தனர். அவர்கள் வெளியே ஓடிவந்து பார்த்தபோது 3 மாடி கட்டிடத்தின் ஒருபகுதி இடிந்து தரைமட்டமாகி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முயற்சித்தனர். மேலும் தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், போலீசார் விரைந்து வந்தனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மோப்பநாய், நவீன கருவிகள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். இடையில் மழை காரணமாக மீட்பு பணி பாதிக்கப்பட்டது. இரவிலும் மீட்பு பணி நீடித்தது.

இந்தநிலையில் மீட்பு படையினர், இடிபாடுகளில் புதைந்து கிடந்த 13 பேரை ஒருவர் பின் ஒருவராக பிணமாக மீட்டனர். இவர்களில் 2 வயது சிறுவன் உள்பட 7 பேர் சிறுவர்-சிறுமிகள் ஆவர். உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இதேபோல மீட்பு படையினர் இடிபாடுகளில் இருந்து 4 வயது சிறுவன், 7 வயது சிறுமி உள்பட 20 பேரை உயிருடன் மீட்டனர். காயம் அடைந்த அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அவ்வாறு சிக்கி இருக்க வாய்ப்பு இல்லை என்று மாநகாட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

பலரின் உயிரை காவு வாங்கிய கட்டிடம் கட்டப்பட்டு 43 ஆண்டுகள் ஆனது தெரியவந்தது. கட்டிடத்தின் மற்றொரு பகுதி இடியாமல் விபத்தில் இருந்து தப்பியதால், அதில் வசித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.

கட்டிடம் இடிந்து விழுந்த பகுதியில் ஏராளமானோர் கூடி நின்றனர். அந்த பகுதியே சோக மயமாக காட்சி அளித்தது.

விபத்து தொடர்பாக போலீசார் கட்டிட உரிமையாளர் சையத் அகமது ஜிலானி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கட்டிடம் இடிந்த பகுதியை தானே மாவட்ட பொறுப்பு மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நர்வேகர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது கட்டிட விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ராஜேஷ் நர்வேகர் கூறினார்.

கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து உள்ளது.

மும்பை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் மழைக்காலத்தின் போது கட்டிடம் இடிந்து விழுவதும், பெருத்த உயிரிழப்பு ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டது. கடந்த மாதம் ராய்காட்டில் உள்ள மகாடில் 5 மாடி குடியிருப்பு தரைமட்டமாகி 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story